அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீட்டிப்பு ரத்து: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு


அமலாக்கத்துறை இயக்குனர் பணி நீட்டிப்பு ரத்து: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
x

கோப்புப்படம்

அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

புதுடெல்லி,

மத்திய அமலாக்கத்துறை இயக்குனராக எஸ்.கே.மிஸ்ரா கடந்த 2018-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு கால பதவிக்காலம் 2020-ம் ஆண்டு நிறைவுற்ற நிலையில், மேலும் 3 ஆண்டுகள் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகுர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.

வேறு ஆட்கள் இல்லையா?

இந்த மனுக்கள் நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுக்களை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட்டு, 'இயக்குனராக நியமிக்க அமலாக்கத் துறையில் வேறு ஆட்களே இல்லையா?, எஸ்.கே.மிஸ்ரா தவிர்க்க முடியாத நபரா?' என கேள்வி எழுப்பியது. இதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எஸ்.கே. மிஸ்ரா ஆகியோர், 'பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பின் இந்தியா குறித்த ஆய்வு கூட்டம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற உள்ளதால், அமைப்புடன் தொடர்ந்து செயலாற்றி வரும் நபர் தவிர்க்க முடியாதவர். அரசியல் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்' என மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

தீர்ப்பு ஒத்திவைப்பு

அமலாக்கத் துறை இயக்குனரின் பதவியை ஓராண்டுக்கு ஒருமுறை நீட்டிப்பது அதன் சுதந்திரத்தை பாதிக்க செய்யும், மீண்டும் நீட்டிப்பு கிடைக்க சமரசங்களை செய்ய வேண்டியிருக்கும் என மனுதாரர் சார்பில் வாதிட்டப்பட்டது.

அமலாக்கத் துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியதும், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய திருத்த சட்டமும் சட்டவிரோதமானது என நீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்ட அப்போதைய மூத்த வக்கீல் கே.வி.விஸ்வநாதன் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, ரிட் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மே 8-ந் தேதி ஒத்திவைத்தது.

ரத்து

இதற்கிடையே இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பு கூறினர்.

அந்த தீர்ப்பில், 'அமலாக்கத்துறை இயக்குனர் எஸ்.கே.மிஸ்ராவுக்கு 3-வது முறை பணி நீட்டிப்பு வழங்கியது சட்டத்துக்கு புறம்பானது, எனவே பணி நீட்டிப்பு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இருப்பினும் அவர் ஜூலை (இம்மாதம்) இறுதிவரை பணியில் தொடர்வார்.

சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனர்களுக்கு 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு வழங்க வகை செய்யும் பதவி நீட்டிப்பு வழங்கும், டெல்லி சிறப்பு போலீஸ் நிறுவன திருத்த சட்டம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய திருத்த சட்டம் செல்லும்' என்று கூறப்பட்டது.

1 More update

Next Story