பிரதமர் மோடியின் பிறந்த நாளை தனித்துவத்துடன் கொண்டாடி மகிழ்ந்த பள்ளி குழந்தைகள்
மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை அவரை போன்று முகமூடி மற்றும் ஆடை அணிந்து, கேக் வெட்டி இன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
சிலிகுரி,
பிரதமர் மோடியின் 73-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு. பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் சமூக ஊடகத்தின் வழியே, தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகளை இன்று தெரிவித்து கொண்டார்.
அதில், உங்களுடைய தொலைநோக்கு பார்வை மற்றும் வலிமையான தலைமைத்துவத்தின் கீழ் பாரதத்தின் வளர்ச்சிக்கான வழியை நீங்கள் உருவாக்குவீர்கள். நீங்கள் எப்போதும் ஒரு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கிய வாழ்வை வழிநடத்தி சென்று, உங்களுடைய ஆச்சரியமளிக்கும் தலைமைத்துவத்தினால் நாட்டு மக்களுக்கு நலனை ஏற்படுத்துவீர்கள் என தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் பள்ளி ஒன்றின் குழந்தைகள் சிலர் அவருடைய பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடியுள்ளனர்.
அவர்கள் பிரதமர் மோடியின் முகமூடிகளை அணிந்து கொண்டனர். அவரை போன்றே ஆடை அணிந்தும் சிலர் காணப்பட்டனர். இதன்பின்னர், அவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
இதுபற்றி அவர்களுடைய ஆசிரியர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பிரதமரின் முக்கியத்துவம் பற்றி குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அவருடைய பிறந்த நாளை கொண்டாடுவது என்பது அவரை பற்றி அறிந்து கொள்வதற்கும், கொண்டாடுவதற்கும் மற்றும் பிரதமரின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொள்வதற்கும் உரிய சிறந்த வழி என கூறியுள்ளார்.