பெங்களூருவில் செத்த எலி கிடந்த உணவை போலீசாருக்கு வழங்கிய ஓட்டலுக்கு 'சீல்' வைப்பு
செத்த எலி கிடந்த உணவை போலீசாருக்கு வழங்கிய ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த ஓட்டலில் உணவை ஆர்டர் செய்த இன்ஸ்பெக்டர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்பட்டு உள்ளதை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் கர்நாடக நீர் பாதுகாப்பு குழு மற்றும் கர்நாடக விவசாயிகள் சங்கம் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தையொட்டி யஷ்வந்தபுரம் பகுதியில் போக்குவரத்து போலீசார், குற்றப்பிரிவு போலீசாருடன் சேர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போக்குவரத்து போலீசாருக்கு யஷ்வந்தபுரம் மேம்பாலம் அருகே உள்ள அசோக் டிபன் சென்டரில் இருந்து காலை சிற்றுண்டியாக தக்காளி சாதம் ஆர்டர் செய்து வினியோகிக்கப்பட்டது. மொத்தம் 180 போலீசாருக்கு ஒவ்வொரு பொட்டலமாக வழங்கப்பட்டது. அதில் ஒரு போலீஸ்காரருக்கு வழங்கிய உணவு பொட்டலத்தில் தக்காளி சாதத்துடன் செத்த எலி கிடந்தது. இதைத்தொடர்ந்து போலீசாருக்கு அந்த உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்படாமல் ஓட்டலுக்கே திரும்ப அனுப்பிவைக்கப்பட்டது.
இதற்கிடையே தக்காளி சாதத்தில் செத்த எலி கிடந்தது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதை அறிந்த பெங்களூரு மாநகர போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித், இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி யஷ்வந்தபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில், யஷ்வந்தபுரம் டவுன் போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் செத்த எலி கிடந்த சாதத்தை போலீசாருக்கு வழங்கிய ஓட்டலுக்கு சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள், உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் உணவை தயாரித்ததில் அலட்சியமாக இருந்ததுடன், சுகாதாரமற்ற முறையில் ஓட்டல் இருந்ததாக கூறி அந்த ஓட்டலை இழுத்து மூடி சீல் வைத்தனர்.
மேலும் அசோக் டிபன் சென்டரில் போலீசாருக்கான உணவை ஆர்டர் கொடுத்த யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜி.சதானந்த் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.