பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை : உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்


பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை : உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்
x

பிரபல ரவுடி ஆதிக் அகமது சுட்டுக் கொலை சம்பவத்தில் உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 144 அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.

இந்த சூழலில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் கடந்த 13ஆம் தேதி போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் எம்எல்ஏவும் பிரபல ரவுடியுமான ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சில மணிநேரங்கள் முன்பு ஆதிக் அகமதுவும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதுவும் மருத்துவ சிகிச்சைக்காக பிரயாக்ராஜ் அழைத்துச் செல்லப்பட்டபோது மர்ம நபர்களால் கொல்லப்பட்டுள்ளனர். செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டு செல்லும்போதே யாரோ ஒரு கும்பல் இருவரையும் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.

இந்த என்கவுன்ட்டர் குறித்து உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இன்னும் அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது கொல்லப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story