டெல்லி விமான நிலையத்தில் அத்துமீறல்: ஒருவர் கைது; பாதுகாப்பு அதிகரிப்பு
இதனை தொடர்ந்து, கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைமையை பற்றி விசாரணைகள் நடந்து வருகின்றன.
புதுடெல்லி,
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில், குடியரசு தினத்திற்கு மறுநாளான நேற்று பாதுகாப்பு விதிகளை மீறி நபர் ஒருவர் உட்புகுந்த சம்பவம் நடந்துள்ளது.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ஏர் இந்தியா விமானம் ஒன்று பாதுகாப்பாக தரையிறங்கிய பின்னர், அதற்கான இடத்தில் நேற்றிரவு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. அப்போது, விமானத்திற்கு குறுக்கே நபர் ஒருவர் சென்றுள்ளார்.
இதனை அந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி கவனித்திருக்கிறார். விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார். உடனடியாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அதிரடியாக அந்நபரை கைது செய்தனர்.
இதன்பின் அந்த நபர் உள்ளூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்நபர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார். அவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில், அரியானாவின் நூ மாவட்டத்தில் இருந்து வந்தவரான அவர் மதுபான பழக்கத்திற்கு அடிமையானது தெரிய வந்தது.
குடியரசு தினம் மற்றும் மிக முக்கிய நபர்களின் இயக்கம் ஆகியவற்றை முன்னிட்டு விமான நிலையம் தீவிர உஷார்நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், அந்நபர் ஊடுருவலில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டு, நிலைமையை பற்றி விசாரணைகள் நடந்து வருகின்றன.