காஷ்மீரில் ஊடுருவலை தடுக்க முயன்ற பாதுகாப்பு படை வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை வழியேயான ஊடுருவலை தடுக்க முயன்ற பாதுகாப்பு படை வீரர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் எல்லை பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினர் ரோந்து மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் அசல் எல்லை கட்டுப்பாட்டு கோடு ஆகிய பகுதிகளில் பயங்கரவாதிகளின் ஊடுருவல், ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை வழியே கரங் நர் பகுதியருகே இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகள் சிலர் முயன்றுள்ளனர். இதனை கவனித்த இந்திய வீரர்கள் அவர்களை தடுக்க துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.
இதில், பயங்கரவாதிகளும் பதுங்கி இருந்து தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த மோதலில், பாதுகாப்பு படை வீரர் ஜஸ்வீர் சிங் என்பவர் மீது துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன.
இதில் பலத்த காயமடைந்த அவரை ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை ஸ்ரீநகர் பாதுகாப்பு படை வட்டாரம் உறுதிப்படுத்தி உள்ளது.