கர்நாடகாவில் பரபரப்பு; போலி டிக்கெட் தயாரித்து, ஜன்னலுக்கு வெளியே வீசிய பஸ் கண்டக்டர்


கர்நாடகாவில் பரபரப்பு; போலி டிக்கெட் தயாரித்து, ஜன்னலுக்கு வெளியே வீசிய பஸ் கண்டக்டர்
x

கர்நாடகாவில் போலி டிக்கெட் தயாரித்து, ஜன்னலுக்கு வெளியே வீசிய அரசு பஸ் கண்டக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் அரசு பஸ் ஒன்றில் கண்டக்டர் ஒருவர் போலியாக கட்டணமில்லா பயணிகள் டிக்கெட்டுகளை தயாரித்து அவற்றை பஸ்சின் ஜன்னல் வழியே வெளியே வீசியிருக்கிறார்.

இதனை பஸ்சில் அமர்ந்திருந்த பெண் பயணி ஒருவர் பார்த்திருக்கிறார். அதனை வீடியோவாக படம் பிடித்த அவர், கண்டக்டரிடம் சென்று சண்டை போட்டுள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் சக்தி திட்டம் அமலானது. இதன்படி, அனைத்து அரசு பஸ்களிலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியும். முதல் 12 நாட்களில் ரூ.100 கோடி அளவிலான டிக்கெட் மதிப்புக்கு, 4 கோடி பெண்கள் பயணம் செய்து உள்ளனர். அரசு பஸ்களில் பெண்கள் பயணிக்கும்போது, கட்டணமில்லா டிக்கெட்டை கண்டக்டர்கள் அவர்களுக்கு வழங்குவார்கள்.

இந்த நிலையில், அந்த கண்டக்டர் செய்த செயலை பார்த்து அதிர்ச்சியடைந்து அவரிடம் சென்ற அந்த பெண், டிக்கெட்டுகளை ஏன் கிழித்து, வெளியே எறிகிறீர்கள்? பதில் சொல்லுங்கள். ஏன் கிழிக்கிறீர்கள்? இதற்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்களா? நாங்களே அதற்கு வரி செலுத்துபவர்கள் என கூறியுள்ளார்.

முந்தின பேருந்து நிறுத்தத்திலும் கூட நீங்கள் டிக்கெட்டுகளை கிழித்து, வீசினீர்கள் என அவர் கூறியுள்ளார். அதற்கு பதிலாக சாரி (வருந்துகிறேன்) என கண்டக்டர் கூறியுள்ளார்.

இதற்கு அந்த பெண், இலவச பஸ் பயணத்திற்காக மக்களே தண்டிக்கப்படுவார்கள். முன்பே இழப்புகள் ஏற்பட்டு உள்ளன என கூறப்பட்டது. கடைசியில் வரி கட்டுபவர்களான நாங்களே பாதிக்கப்படுவோம். பதில் பேசுங்கள். இதில் சாரி கூறுவதற்கு ஒன்றும் இல்லை என கூறினார்.

இதுபற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. கண்டக்டர்கள் தங்களுக்கான இலக்குகளை அடைந்து விட்டால், அதற்கான ஊக்க தொகை கிடைக்கும். இதற்காக போலியான டிக்கெட்டுகள் தயாரிப்பு போன்ற வேலைகளில் அவர் ஈடுபடுகிறார்கள் என வீடியோவை பார்த்த பலர் விமர்சனங்களை வெளியிட்டு உள்ளனர். இதுபற்றிய விசாரணைக்கு பின்னர், அந்த கண்டக்டர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.


Next Story