ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது - பிரசாந்த் கிஷோர்


ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது - பிரசாந்த் கிஷோர்
x

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை அதிகப்படியானது என்று பிரசாந்த் கிஷோர் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

'ராகுல் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்'

ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி, எம்.பி. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் தொடர்ந்து கருத்து கூறி வருகின்றனர்.

அது பற்றிய ஒரு தொகுப்பு இது.

ஹிமாந்த பிஸ்வ சர்மா ( அசாம் முதல்-மந்திரி, பா.ஜ.க. மூத்த தலைவர்):-

சில நேரங்களில் நாக்கு பிறழ்வு நேர்ந்து விடுகிறது. எங்களுக்கும் அந்த அனுபவம் உண்டு. ஆனால் நாங்கள் வேண்டுமென்று அவ்வாறு கூறவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறோம். ராகுல் காந்தியும் இதைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், விஷயம் அப்போதே அங்கேயே முடிந்திருக்கும்.

மத்திய அரசுக்கு தீவிர பங்களிப்பு

ராஜீவ் ரஞ்சன் சிங் (ஐக்கியஜனதா தளம் கட்சித்தலைவர்):-

ஒரு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. பதவி பறிப்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் அறிவிக்கை வர வேண்டும். அதன் பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று, மக்களவை சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும்.

ராகுல் காந்தியைப் பொறுத்தமட்டில், கோர்ட்டு உத்தரவு வந்த 24 மணி நேரத்திற்குள் பதவி பறிக்கப்பட்டு விட்டது. இந்த அவசரம்தான், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் தீவிர பங்களிப்பை காட்டுகிறது. ஆனால் மக்கள் தெளிவானவர்கள். இதற்கு சரியான நேரத்தில் பா.ஜ.க.வுக்கு அவர்கள் பதிலடி கொடுப்பார்கள்.

அன்றும் இன்றும்....

மாயாவதி (உ.பி. முன்னாள் முதல்-மந்திரி, பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர்):-

அரசியல் காழ்ப்புணர்ச்சியும், வெறுப்புணர்வும் நாட்டுக்கு கடந்த காலத்தில் நன்மை செய்யவில்லை. எதிர்காலத்திலும் நன்மை செய்யாது. நெருக்கடி நிலை காலத்தில் என்ன நடந்தது என்பதையும், தற்போது தங்கள் தலைவர் ராகுல் காந்திக்கு என்ன நடக்கிறது என்பதையும் காங்கிரஸ் எண்ணிப்பார்க்க வேண்டும்.

முன்பு காங்கிரசும், இப்போது பா.ஜ.க.வும் தங்களது அதீத சுய நல அரசியலால் மக்கள் நலனில் கவனம் செலுத்தவும் இல்லை, ஏழ்மை, வேலையின்மை, பிற்போக்கான நிலையை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது, துரதிர்ஷ்டவசமானது.

ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகள்

சசிதரூர் (முன்னாள் மத்திய மந்திரி, காங்கிரஸ் மூத்த தலைவர்):-

ராகுல் காந்தி பதவி பறிப்பு, பா.ஜ.க.வின் சொந்த இலக்கு ஆகும். இந்த விவகாரத்தின் முடிவில், ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளும் பலன் அடைவார்கள். இது பா.ஜ.க.வுக்கு திட்டமிட்டிராத பின்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் உலகமெங்கும் இந்திய ஜனநாயகத்தை அம்பலப்படுத்தி உள்ளது. ராகுல் காந்திக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது ஒவ்வொரு நாட்டின் தலைநகரில் பத்திரிகைகளில் தலைப்புச்செய்தியாகி இருக்கிறது மேலும், இதுவரை இல்லாத வகையில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை அவர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

அதிகப்படியான தண்டனை....

பிரசாந்த் கிஷோர் (தேர்தல் வியூக வல்லுனர்):-

நான் சட்ட நிபுணர் அல்ல. இருப்பினும் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக தோன்றுகிறது. இது முதல் நிகழ்வும் அல்ல, கடைசி நிகழ்வாகவும் இருக்காது.

சிறிய இதயம் படைத்த யாரும் மாமனிதர்களாக மாற மாட்டார்கள் என்ற அடல்பிகாரி வாஜ்பாயியின் பிரபலமான வரியை மத்திய அரசுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஆட்சி அதிகாரத்தில் உள்ளனர். அவர்கள் பெரிய மனதைக் காட்டி இருக்க வேண்டும். அவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்து இருக்க வேண்டும். ராகுல் காந்தி மேல்முறையீடு செய்து, அங்கு நிவாரணம் கிடைக்காதபோது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story