50 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்; அரசு பள்ளி முதல்வர் தப்பியோட்டம்


50 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல்;  அரசு பள்ளி முதல்வர் தப்பியோட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2023 8:43 AM GMT (Updated: 4 Nov 2023 10:05 AM GMT)

அந்த முதல்வர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுபவர் என தங்களுக்கு தெரியும் என மற்ற 10 மாணவிகள், புகாரில் தெரிவித்துள்ளனர்.

சண்டிகார்,

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் முதல்வராக பணியாற்றி வருபவருக்கு எதிராக சில மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறியுள்ளனர்.

இதுபற்றி மாநில மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து விட்டு, அதற்கு அடுத்த நாளான கடந்த செப்டம்பர் 14-ந்தேதி போலீசில் புகார் அளித்தனர். எனினும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதன்பின்னர், அரியானா போலீசார் கடந்த திங்கட்கிழமை அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்குள் அவர் தப்பிவிட்டார்.

இதுபற்றி பஞ்சகுலாவில், மாநில மகளிர் ஆணைய தலைவியான ரேணு பாட்டியா கூறும்போது, பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவிகளிடம் இருந்து 60 எழுத்துப்பூர்வ புகார்கள் வந்துள்ளன.

அவற்றில், 50 புகார்களில் உடல் ரீதியான துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற 10 மாணவிகள், அந்த முதல்வர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுபவர் என தங்களுக்கு தெரியும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

அந்த முதல்வர் பள்ளி மாணவிகளை அவருடைய அலுவலகத்திற்கு அழைப்பது வழக்கம். பின்னர் மாணவிகளிடம் தகாத செயல்களில் ஈடுபட்டுள்ளார் என மாணவிகள் குற்றச்சாட்டாக கூறியுள்ளனர் என பாட்டியா தெரிவித்து உள்ளார்.

புகார் அளித்தும், உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டாக கூறியதுடன், மாணவிகள் மீண்டும் எங்களை தொடர்பு கொண்டனர். இதனால், நாங்கள் போலீஸ் சூப்பிரெண்டிடம் பேசினோம். இதன்பின்னரே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

இதனால், குற்றவாளி தப்பியோட வழியேற்பட்டு விட்டது என்றும் பாட்டியா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதில், முதல்வருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியை ஒருவரின் பங்கு பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் சிலர், மாணவிகளை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர் என்ற புகாரும் வந்துள்ளது.

பள்ளி முதல்வர், பள்ளி அலுவலகத்தின் கதவை, மறுபக்கம் இருந்து பார்க்கும்போது எதுவும் தெரியாதபடிக்கு மாற்றி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

அவர் வேலை செய்த வேறு 2 பள்ளிகளிலும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார் என்பன போன்ற புகார்கள் தெரிய வந்துள்ளன என பாட்டியா தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி பிரதமர் அலுவலகத்திற்கும் மாணவிகள் கடிதங்கள் எழுதியுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story