60 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்


60 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தல் விவகாரம்; பள்ளி முதல்வருக்கு நீதிமன்ற காவல்
x

செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஜிந்த்,

அரியானாவில் அரசு பெண்கள் மேனிலை பள்ளியில் 60 மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த விவகாரத்தில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரிடம் நடவடிக்கை கோரி, 5 பக்க கடிதம் ஒன்றை, பள்ளி மாணவிகள் 15 பேர் எழுதியுள்ளனர்.

அதில், செய்முறை தேர்வில் தோல்வி அடைய செய்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அவர் மிரட்டல் விடுத்துள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அந்த அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் முதல்வராக பணியாற்றி வருபவருக்கு எதிராக, மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சில நாட்களுக்கு முன் ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பற்றி மாநில மகளிர் ஆணையத்திடம் தெரிவித்து விட்டு, அதற்கு அடுத்த நாளான கடந்த செப்டம்பர் 14-ந்தேதி மாணவிகள் போலீசில் புகார் அளித்தனர். எனினும், போலீசார் உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் அவரை மாவட்ட நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்தது. இதன்பின்னர், அரியானா போலீசார் கடந்த திங்கட்கிழமை அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதற்குள் அவர் தப்பிவிட்டார்.

இதுபற்றி பஞ்சகுலாவில், மாநில மகளிர் ஆணைய தலைவியான ரேணு பாட்டியா கூறும்போது, பள்ளி முதல்வருக்கு எதிராக மாணவிகளிடம் இருந்து 60 எழுத்துப்பூர்வ புகார்கள் வந்துள்ளன.

அவற்றில், 50 புகார்களில் உடல் ரீதியான துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற 10 மாணவிகள், அந்த முதல்வர் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடுபவர் என தங்களுக்கு தெரியும் என புகாரில் தெரிவித்துள்ளனர்.

அந்த முதல்வர் பள்ளி மாணவிகளை அவருடைய அலுவலகத்திற்கு அழைப்பது வழக்கம். பின்னர் மாணவிகளிடம் தகாத செயல்களில் ஈடுபட்டார் என மாணவிகள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர் என பாட்டியா தெரிவித்து உள்ளார்.

புகார் அளித்தும், உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொள்ளாத நிலையில், மாணவிகள் மீண்டும் எங்களை தொடர்பு கொண்டனர். இதனால், நாங்கள் போலீஸ் சூப்பிரெண்டிடம் பேசினோம். இதன்பின்னரே எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது என்றும் பாட்டியா கூறினார்.

இதனால், குற்றவாளி தப்பியோட வழியேற்பட்டு விட்டது என்றும் பாட்டியா குற்றச்சாட்டாக கூறியுள்ளார். இதில், முதல்வருக்கு ஆதரவாக செயல்பட்ட ஆசிரியை ஒருவரின் பங்கு பற்றியும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் சிலர், மாணவிகளை தொடர்பு கொண்டு மிரட்டுகின்றனர் என்ற புகாரும் வந்துள்ளது.

பள்ளி முதல்வர், மறுபக்கம் இருந்து பார்க்கும்போது எதுவும் தெரியாதபடிக்கு பள்ளி அலுவலக கதவை வசதியாக மாற்றி இருக்கிறார் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கு முன்பு, அவர் வேலை செய்த வேறு 2 பள்ளிகளிலும் மாணவிகளிடம் தவறாக நடந்திருக்கிறார் என்பன போன்ற புகார்களும் தெரிய வந்துள்ளன என பாட்டியா கூறினார்.


Next Story