மராட்டிய கவர்னரிடம் சில பண்புகள் மாறி உள்ளது- சரத்பவார்


மராட்டிய கவர்னரிடம் சில பண்புகள் மாறி உள்ளது- சரத்பவார்
x
தினத்தந்தி 3 July 2022 9:42 PM GMT (Updated: 3 July 2022 9:47 PM GMT)

ஆட்சி அமைக்க உரிமை கோர சென்ற போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி இனிப்பு ஊட்டினார். இந்த விவகாரம் குறித்து "கவனரிடம் சில பண்புகள் மாறி உள்ளது" என சரத்பவார் கிண்டல் செய்து உள்ளார்.

இனிப்பு ஊட்டிய கவர்னர்

சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் கடந்த வியாழக்கிழமை ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை மும்பை ராஜ்பவனில் சந்தித்தனர். அப்போது, கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி ஏக்நாத் ஷிண்டே, பட்னாவிசுக்கு இனிப்பு ஊட்டினார்.

கவர்னர், ஆட்சி அமைக்க உரிமை கோர வந்தவர்களுக்கு இனிப்பு ஊட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சரத்பவாா் கிண்டல்

இந்தநிலையில் இந்த விவகாரத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை கிண்டல் செய்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்பு விழாவை டி.வி.யில் பார்த்தேன். கவர்னர் அவர்களுக்கு இனிப்பு ஊட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். அவரிடம் சில பண்புகள் மாறி இருப்பதாக தெரிகிறது.

இதேபோல 2019-ல் மகாவிகாஸ் அகாடி பதவி ஏற்பு விழாவில் நான் இருந்தேன். அப்போது கவர்னர் சில மந்திரிகள் தலைவர்களின் பெயரை கூறி பதவி ஏற்க எதிர்ப்பு தெரிவித்தார். அதுகுறித்து என்னிடம் கூட அவர் கூறினார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே பால்தாக்கரே, ஆனந்த் திகே பெயரை கூறி பதவி ஏற்ற போது அவர் எதுவும் கூறவில்லை.

நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

இதேபோல 12 எம்.எல்.சி. விவகாரமும் கவா்னரின் கண்ணுக்கு தெரியாமல் இருந்தது. அவர் 12 எம்.எல்.சி.களை நியமிக்க ஒப்புதல் அளிக்கவே இல்லை. தற்போது அவர் விரைவில் முடிவு எடுப்பார் என கூறப்படுகிறது. கவர்னர் பதவி பிராமணத்தை மீறியது தெளிவாக தெரிகிறது. கவர்னர் பல தரப்பட்ட அரசியல் சூழல்களை சந்திக்கும் போது நடுநிலையுடன் செயல்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story