பயங்கரவாதி ஷாரிக் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்


பயங்கரவாதி ஷாரிக் பற்றிய திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

மங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதி ஷாரிக் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு:

மங்களூருவில் குண்டுவெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதி ஷாரிக் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பரபரப்பு தகவல்கள்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பயங்கரவாதியான ஷாரிக்கிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரைப்பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:-

அதாவது பயங்கரவாதி ஷாரிக்(வயது 22), 'ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் நிஜமான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் எங்களுக்கு முழு சுதந்திர கிடைத்திட வேண்டும்' என்று கூறி போராடி வந்தார். மேலும் இதுதொடர்பான போராட்டங்களிலும் அவர் பங்கேற்று வந்தார்.

ஜாமீனில் வெளிவந்தவர்

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் மங்களூருவில் இருபிரிவினர் கலவரம் உருவாகும் வகையில் சுவர்களில் கருத்துக்களை எழுதி இருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்திருந்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்திருந்தார்.

இவரும், சிவமொக்கா டவுன் சித்தேஷ்வர் நகரைச் சேர்ந்த சையது யாசின், மங்களூருவைச் சேர்ந்த மாஸ் முனீர் ஆகியோரும் கூட்டாளிகள் ஆவார்கள். இதில் சையது யாசினும், மாஸ் முனீரும் பி.யூ. கல்லூரியில் படித்தபோது நண்பர்கள் ஆனார்கள்.

மெசஞ்சர் செயலி மூலம்...

இவர்கள் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வீடியோக்களை பார்த்து வந்தனர். மேலும் அதுபோல் இந்தியாவிலும் பயங்கரவாதத்தை நிகழ்த்த திட்டமிட்டு வந்தனர். மேலும் இவர்கள் செல்போன்கள், வாட்ஸ்-அப் மூலமாக தங்களது உரையாடல்களை நடத்தி வந்தனர். மேலும் டெலிகிராம், மெசஞ்சர் செயலி உள்ளிட்டவை மூலமாகவும் தங்களது உரையாடல்களை தொடர்ந்து வந்தனர்.

இந்த உரையாடல்களின் வாயிலாகத்தான் சையது யாசி, மாஸ் முனீர் ஆகியோருடன் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி தாலுகா சொப்புகுட்டே கிராமத்தைச் சேர்ந்த ஷாரிக்கிற்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.

நேரடி தொடர்பு...

பின்னர் இவர்கள் 3 பேரும் வெடிகுண்டு தயாரிப்பது தொடர்பான கட்டுரைகள், தகவல்கள் ஆகியவற்றை தங்களது செல்போன்களில் பதிவிறக்கம் செய்து பகிர்ந்து கொண்டனர். மேலும் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அதிபயங்கர வீடியோக்களான தலை துண்டித்தல், கொடூரமாக கொலை செய்தல் போன்ற வீடியோக்களையும் பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லை.

இருப்பினும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு சொந்தமான சேனல்களில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

வெடிகுண்டு தயாரித்தனர்

இதில் யாசின் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயர் ஆவார். மாஸ் முனீர் மெக்கானிக் என்ஜினீயர் ஆவார். இவர்கள் இருவரும் சேர்ந்து வெடிகுண்டு தயாரிக்க திட்டமிட்டனர். யாசிர் ரிலே சர்க்கியூட் போர்டு, டைமர் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வாங்கினார். அலுமினியம் பவுடர் அவருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து பேட்டரிகள், சுவிட்ச்சுகள் ஆகியவற்றை கொண்டு யாசின் மற்றும் முனீர் சேர்ந்து வெடிகுண்டு ஒன்றை தயாரித்தனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி அந்த வெடிகுண்டை சிவமொக்கா மாவட்டத்தில் துங்கா நதிக்கரையோரம் குருபுரா-புரலே பகுதிகளுக்கு இடையேயுள்ள ஒரு தோட்டத்தில் வைத்து வெடிக்கச்செய்து பயிற்சி பெற்றனர்.

இந்து அமைப்பு பிரமுகர் மீது தாக்குதல்

ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் அது பெரிய அளவில் வெடிக்கவில்லை. இருப்பினும் அதை அவர்கள் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துக் கொண்டனர். மேலும் அதே பகுதியில் அவர்கள் இந்திய தேசியை கொடியையும் தீயிட்டு எரித்து வீடியோ எடுத்தனர். பின்னர் பெரிய அளவில் வெடிகுண்டு தயாரிக்க வேண்டும் என்று இருவரும் திட்டமிட்டனர். இந்த திட்டங்களுக்கு ஷாரிக் மூளையாக செயல்பட்டு உள்ளார். இதுபற்றி அறிந்ததும் போலீசார் அவர்களை தேட தொடங்கினர்.

அதையடுத்து ஷாரிக் உள்ளிட்ட 3 பேரும் பெங்களூரு, மும்பை, கோவாக ஆகிய பகுதிகளுக்கு தப்பிச் சென்றனர். பின்னர் அவர்கள் சிவமொக்காவுக்கு திரும்பி இருந்தனர். அப்போது வீரசாவர்க்கர் உருவப்படம் அடங்கிய பேனரை அகற்றிய விவகாரத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது இந்து அமைப்பு பிரமுகரான பிரேம்சிங் என்பவரை ஷாரிக் உள்ளிட்ட 3 பேரும் தாக்கி இருந்தனர். அதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் யாசின், முனீர் ஆகியோர் சிக்கினர். ஆனால் ஷாரிக் மட்டும் தலைமறைவானார்.

ஐ.எஸ். பயங்கரவாதி

இந்த நிலையில்தான் மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயம் அடைந்த நபர் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் தலைமறைவான ஷாரிக்காக இருக்கலாம் என்று தெரியவந்தது. இதுபற்றி சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக் குமார் தலைமையில் விசாரணை நடந்து வந்தது. அவர் ஷாரிக்கின் குடும்பத்தினரை நேரில் வரழைத்து விசாரணை நடத்தினார்.

மேலும் அவர்கள் ஷாரிக்கை அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினர். இதையடுத்து குண்டுவெடிப்பை நிகழ்த்தியது ஷாரிக் தான் என்று உறுதி செய்யப்பட்டது. இந்த தகவலை போலீசார் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

ஷாரிக் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இருப்பதால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார், யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story