உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்: குடிபோதையில் டாக்டர் சிகிச்சை; ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் டாக்டர் சிகிச்சை அளித்ததில் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சிராவ்லி காஸ்பூர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தங்களது ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கி கொண்டு சிகிச்சைக்காக பெற்றோர் சென்றுள்ளனர். அந்த குழந்தை பாப் கார்னை சாப்பிட்டதில் அது தொண்டையில் சிக்கியுள்ளது.
அதற்கு அவசர சிகிச்சை அளிக்க சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இரவு பணியில் இருக்க வேண்டிய மருத்துவர் தர்மேந்திர குப்தா மருத்துவமனையில் இல்லை.
இதன்பின்னர், தகவல் அறிந்து ஒரு மணிநேரம் கழித்து குடிபோதையில் அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர், சிகிச்சை அளித்தபோது, குழந்தை உயிரிழந்து விட்டது.
இதனை தொடர்ந்து, அந்த மருத்துவர் குழந்தையின் தாயாரிடம் வேறொரு குழந்தையை பெற்று கொள்ளும்படி கூறியுள்ளார் என கூறி குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக மருத்துவர் குப்தாவை தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் நீலம் குப்தா பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டு உள்ளார். 3 டாக்டர்கள் கொண்ட குழு விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
இதேபோன்று தலைமை மருத்துவ அதிகாரி அவதேஷ் குமார் கூறும்போது, குழந்தையின் உறவினர்கள் கூறிய குற்றச்சாட்டுகளின் பேரில் மருத்துவரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அதில், குற்றச்சாட்டுகள் உண்மையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.