ஆட்கொல்லி சிறுத்தையை சுட்டுக் கொல்ல உத்தரவு


ஆட்கொல்லி சிறுத்தையை சுட்டுக் கொல்ல உத்தரவு
x

சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மைசூரு:

சிறுவன் உள்பட 3 பேரை கொன்ற ஆட்கொல்லி சிறுத்தையை சுட்டுக் கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சிறுத்தை தாக்கி சிறுவன் சாவு

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் சிறுத்தைகள் அட்டகாசம் அதிகமாக உள்ளது. அந்த சிறுத்தைகள் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவதுடன் மனிதர்களை தாக்கி வருகிறது. கடந்த 21-ந்தேதி இரவு, ஹொரலஹள்ளி கிராமத்தை சேர்ந்த ஜெயந்த் என்ற 11 வயது சிறுவனை சிறுத்தை அடித்து கொன்று உடலை வனப்பகுதியில் இழுத்து சென்றிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள கிராம மக்கள் அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 20-ந்தேதி ஹொரலஹள்ளி கிராமத்துக்கு அருகே உள்ள கன்னநாயக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சித்தம்மா (வயது 60) என்ற மூதாட்டியையும், கடந்த டிசம்பர் மாதம் எம்.கெப்பேஉண்டி கிராமத்தை சேர்ந்த மேகனா என்ற இளம்பெண்ணையும் சிறுத்தை கொன்றிருந்தது.

சிறப்பு படை நியமனம்

டி.நரசிப்புரா தாலுகாவில் சிறுத்தையின் தொடர் அட்டகாசத்தால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில், டி.நரசிப்புரா தாலுகாவில் மனிதர்களை தாக்கி வரும் சிறுத்தைகளை பிடிக்க சிறப்பு படையை நியமித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில், ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி, எம்.கெப்பேஉண்டி கிராமங்கள் 6 கிலோ மீட்டர் சுற்றளவில் தான் உள்ளன. இதனால் அந்த சிறுவன் உள்பட 3 பேரையும் ஒரே சிறுத்தை வேட்டையாடி கொன்றிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.

சுட்டுக் கொல்ல உத்தரவு

ேமலும் அந்த சிறுத்தை மனிதனின் ரத்தத்தை ருசி பார்த்ததால், மனிதனை உண்ணும் ஆட்கொல்லி சிறுத்தையாக மாறியிருக்கலாம் என வனத்துறையினர் கருதுகிறார்கள். இதனால் அந்த ஆட்கொல்லி சிறுத்தையை கண்டதும் சுட்டுக் கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வனத்துறை சிறப்பு படையினர் கவச உடை மற்றும் துப்பாக்கிகளுடன் அந்த சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி, எம்.கெப்பேஉண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிகிறதா என்றும் வனத்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் ஹொரலஹள்ளி, கன்னநாயக்கனஹள்ளி, எம்.கெப்பேஉண்டி மற்றும் சுற்றுவட்டார மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story