நாட்டின் பொருளாதாரம் 9 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி; சித்தராமையா குற்றச்சாட்டு


நாட்டின் பொருளாதாரம் 9 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி; சித்தராமையா குற்றச்சாட்டு
x

பா.ஜனதா ஆட்சியின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் 9 ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா ஆட்சியின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் 9 ஆண்டுகளில் கடுமையாக வீழ்ச்சி அடைந்திருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

பெங்களூருவில் நேற்று இளைஞர் காங்கிரஸ் தேசிய மாநாட்டை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்து பேசியதாவது:-

ரூ.170 லட்சம் கோடி கடன்

நமது நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு வரை இந்தியாவின் மொத்த கடனே ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து கடந்த 9 ஆண்டுகளில் ரூ.117 லட்சம் கோடியை கடனாக வாங்கி உள்ளனர். இதன்மூலம் நமது நாட்டின் தற்போதைய கடன் ரூ.170 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது கச்சா எண்ணெய் விலை 125 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை 76 டாலராக இருந்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை பிரதமர் மோடி தலைமையிலான அரசு குறைக்கவில்லை. தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறார்கள். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு பா.ஜனதா அரசே காரணம். பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர்களின் விலை உயர்வு தான் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

பொருளாதாரம் வீழ்ச்சி

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. விவசாய பயிர்களுக்கு மத்திய பா.ஜனதா அரசு சரியான ஆதரவு விலை கூட வழங்குவதில்லை. கடந்த 9 ஆண்டுகால பா.ஜனதா ஆட்சியில் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்து விட்டது. நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மக்கள் விரோத ஆட்சி, ஊழல் ஆகியவை காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக இந்த நாடு பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது.

தற்போது நாட்டில் இளைஞர்கள் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராட வேண்டும். மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு, வசதி படைத்தவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது.

வரி 22 சதவீதமாக குறைப்பு

பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக பிரதமர் மோடி குறைத்திருக்கிறார். அதற்கு பதிலாக ஏழை மக்களுக்கான பால், அரிசி உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விதிக்கிறார். தலித்துகள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு சாதாரண நியாயம் கூட கிடைக்காமல் செய்து விட்டனர். அனைவருக்கும் சமமான நீதியை கூட கிடைக்க விடாமல் உடைத்து எறிந்து விட்டார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story