பா.ஜனதாவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
பா.ஜனதாவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரகன்னடா மாவட்டம் ஹொன்னாவராவில் பரேஸ் மேத்தா என்ற இளைஞர் மர்மமான முறையில் இறந்தார். இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்று கூறி பா.ஜனதாவினர், சி.பி.ஐ. விசாரணை கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.ஐ. போலீசார், தற்போது கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், பரேஸ் மேத்தா கொலை செய்யப்படவில்லை என்றும், அது திடீரென நிகழ்ந்த இறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பரேஷ் மேத்தா மர்மமான முறையில் இறந்தார். இது கொலை அல்ல என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. சி.பி.ஐ. அறிக்கை பா.ஜனதாவினரின் கன்னத்தில் விழுந்த அறை ஆகும். பா.ஜனதாவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ஜனதா பெற்றுள்ள ஒவ்வொரு தொகுதியின் வெற்றியின் பின்னாலும் பரேஸ் மேத்தா போன்ற அப்பாவி இளைஞர்களின் ரத்தம் உள்ளது.
இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.