பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும்; டி.கே.சிவக்குமார்-சித்தராமையா கூட்டாக வேண்டுகோள்


பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும்; டி.கே.சிவக்குமார்-சித்தராமையா கூட்டாக வேண்டுகோள்
x

கர்நாடக நிலத்தின் மீது மராட்டியம் தாக்குதல் நடத்தி இருப்பதால் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடக நிலத்தின் மீது மராட்டியம் தாக்குதல் நடத்தி இருப்பதால் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும் என்று டி.கே.சிவக்குமார், சித்தராமையா கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் கூட்டாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மருத்துவ காப்பீட்டு திட்டம்

மத்திய-மாநில பா.ஜனதா அரசுகள் கர்நாடகத்தை பல துண்டுகளாக பிரித்து மாநிலத்தை சீரழிக்க முயற்சி செய்கின்றன. கர்நாடக எல்லையில் 864 கிராமங்களில் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.54 கோடி நிதியை அந்த மாநிலம் ஒதுக்கியுள்ளது. மராட்டியத்தின் இந்த முடிவால் கர்நாடகத்தின் 6½ கோடி கன்னடர்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜனதாவின் இந்த சதிக்கு எதிராக கன்னடர்கள் ஒவ்வொருவரும் கடைசி வரை போராடுவார்கள். கர்நாடகத்தின் நிலத்தை கொள்ளையடிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். கர்நாடகத்தின் சுயமரியாதை, கவுரவம், நிலத்தை பாதுகாக்க காங்கிரஸ் தொண்டர்கள் தங்களது உயிரையும் தியாகம் செய்ய தயாராக உள்ளனர். கர்நாடகத்தின் நிலத்தை பறித்து கொள்ளும் முயற்சிக்கு பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் தான் நேரடி காரணமாக இருப்பார்கள்.

பா.ஜனதா நாசப்படுத்துகிறது

மத்திய அரசின் உதவியுடன் மராட்டிய அரசு பட்டப்பகலில் அரசியல் சாசனத்தை படுகொலை செய்துள்ளது. மாநிலங்களின் கவுரவத்தை காக்கும் அரசியல் சாசன தத்துவங்களை பா.ஜனதா நாசப்படுத்துகிறது. மராட்டியம் தனது திட்டங்களை கர்நாடக எல்லைக்குள் செயல்படுத்த முயற்சி செய்வது சட்டவிரோதம், அராஜகம் மற்றும் அரசியல் சாசனத்தின் விருப்பங்களை நாசப்படுத்தும் முயற்சி ஆகும்.

அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின்படி மராட்டிய அரசை கலைப்பது என்பது சரியான நடவடிக்கையாக இருக்கும். அதனால் ஜனாதிபதி உடனே மராட்டிய அரசை கலைக்க வேண்டும். இதுபற்றி எதுவும் பேசாமல் உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கர்நாடகத்தின் நிலப்பிரதேசம் மற்றும் கவுரவம் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் 4 பேர், 26 எம்.பி.க்கள் (சுயேச்சை எம்.பி. உள்பட) பேரும் காரணம் ஆகும். அவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆதரிக்க வேண்டும்

வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராக வேண்டும். இதன் மூலம் கர்நாடகத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். கர்நாடகத்தின் கவுரவத்தை காப்பாற்ற மக்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story