பெங்களூரு மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டர் தகவல்களை அளிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
பெங்களூரு மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் விடப்பட்ட டெண்டர் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் விடப்பட்ட டெண்டர் குறித்த தகவல்களை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.
6 மாதங்களில் நடந்த டெண்டர்...
கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில், முதல்-மந்திரியாக சித்தராமையா பதவி ஏற்றதும், பெங்களூரு மாநகராட்சியில் புதிய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், புதிய திட்டங்களுக்காக எந்த டெண்டர் அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தார்.
இந்த நிலையில், பா.ஜனதா ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையாவை, மந்திரிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், பா.ஜனதா ஆட்சியில் இருந்த போது, அதாவது கடந்த 6 மாதங்களில் பெங்களூரு மாநகராட்சியில் விடப்பட்ட டெண்டர் விவரங்கள் பற்றிய தகவல்களை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து துறைகளின் தகவல்கள்
அதாவது கடந்த 6 மாதங்களில் நடந்த வளர்ச்சி பணிகள் பற்றியும், அதற்காக விடப்பட்ட டெண்டர் மற்றும் மாநகராட்சிக்கு அரசு வழங்கிய நிதி உதவி பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிவிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு துறை மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் கடந்த 6 மாதங்களில் விடப்பட்ட டெண்டர், அதற்காக விடுக்கப்பட்ட நிதி உள்ளிட்ட தகவல்களை தெரிவிக்கும்படி சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார்.
மாநகராட்சியின் ஒவ்வொரு துறையிலும் நடந்த டெண்டர் குறித்து, அந்தந்த துறைகளின் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனை செயலாளர்கள் பரிசீலித்து, அதன்பிறகு, முதல்-மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளனர். ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட பணிகளுக்கான டெண்டர், அதற்காக விடுவிக்கப்பட்ட நிதி குறித்து தகவல் தெரிவிக்க மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத்திற்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
தனித்தனியாக வழங்கப்படும்
இதுகுறித்து மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூரு மாநகராட்சியில் கடந்த 6 மாதங்களில் நடந்த டெண்டர் விவரங்கள் குறித்த தகவல்களை தெரிவிக்கும்படி முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கடந்த பா.ஜனதா ஆட்சியில் பெங்களூரு மாநகராட்சியில் 5 ஆண்டுகள் நடந்த டெண்டர் விவரங்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.
இதன் காரணமாக 6 மாதம் மற்றும் கடந்த 5 ஆண்டுகள் நடந்த டெண்டர் விவரங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு, தனத்தனியாக முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் துணை முதல்-மந்திரி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்', என்றார்.