உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக சேவை செய்வேன்; வருணாவில் முதல்-மந்திரி சித்தராமையா உருக்கம்


உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக சேவை செய்வேன்; வருணாவில் முதல்-மந்திரி சித்தராமையா உருக்கம்
x

தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும் உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக சேவை செய்வேன் என்று வருணாவில் முதல்-மந்திரி சித்தராமையா உருக்கமாக தெரிவித்தார்.

மைசூரு:

தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும் உயிர் இருக்கும் வரை கர்நாடக மக்களுக்காக சேவை செய்வேன் என்று வருணாவில் முதல்-மந்திரி சித்தராமையா உருக்கமாக தெரிவித்தார்.

சித்தராமையா வருகை

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ளது. முதல்-மந்திரியாக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் அனைத்து மந்திரிகளும் பதவி ஏற்றுள்ளனர். முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டம் வருணா ெதாகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற பிறகு சித்தராமையா நேற்று முதல் முறையாக மைசூருவுக்கு வந்தார்.

பெங்களூருவில் இருந்து மைசூருவுக்கு ஹெலிகாப்டரில் வந்த அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சக்தி திட்டம்

ஹெலிபேடில் சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா ஆட்சியில் 40 சதவீத கமிஷன், சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு உள்ளிட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த பரிசீலனை நடந்து வருகிறது. இதுகுறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். நாங்கள் அளித்த வாக்குறுதிபடி 5 இலவச திட்டங்களையும் கட்டாயம் நிறைவேற்றுவோம்.

மாநிலத்துக்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி. பாக்கி பணம் குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம். நாளை (அதாவது இன்று) முதல் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டம் தொடங்கப்படுகிறது. வருகிற 1-ந்தேதி முதல் கலபுரகியில் கிரகலட்சுமி திட்டம் தொடங்கப்படும். பா.ஜனதாவின் 9 ஆண்டுகால ஆட்சியால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உயிர் உள்ள வரை...

பின்னர் சித்தராமையா தனது சொந்த தொகுதியான வருணாவுக்கு வந்தார். இதையடுத்து அவர் வருணா தொகுதியில் பிளிகெரே உள்ளிட்ட சில கிராமங்களுக்கு திறந்த வாகனத்தில் சென்று மக்களுக்கு நன்றி கூறினார். அவரை காண ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர். மேலும் சித்தராமையாவுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அங்கு மக்கள் மத்தியில் சித்தராமையா உருக்கமாக பேசியதாவது:-

இது என்னுடைய கடைசி தேர்தல் ஆகும். உங்களது ஆசிர்வாதத்தால் நான் முதல்-மந்திரி ஆகி உள்ளேன். அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன். தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், கர்நாடக மக்களுக்காக உயிர் உள்ள வரை சேவையாற்றுவேன். இந்த முறை மக்கள் காங்கிரசை தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வைத்துள்ளனர். இது சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு கிடைத்த ெவற்றி அல்ல. மாநிலத்தின் மக்களுக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் அறிவித்த உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக சித்தராமையா சுத்தூர் மடத்துக்கு சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.


Next Story