குப்பை கழிவுகளை நிர்வகித்ததில் முறைகேடு; விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவு


குப்பை கழிவுகளை நிர்வகித்ததில் முறைகேடு; விசாரணை நடத்த சித்தராமையா உத்தரவு
x
தினத்தந்தி 22 Jun 2023 2:46 AM IST (Updated: 22 Jun 2023 2:35 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் குப்பை கழிவுகளை நிர்வகித்ததில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் குப்பை கழிவுகளை நிர்வகித்ததில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு

கர்நாடக மேல்-சபை உறுப்பினராக இருந்து வருபவர் டி.ஆர்.ரமேஷ். இவர், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், பெங்களூருவில் குப்பை மற்றும் கழிவுகளை நிர்வகிப்பதில் கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு விதமான முறைகேடுகள் நடைபெற்று இருக்கிறது. பல்வேறு விதிமுறைகளை மீறி குப்பை கழிவுகளை நிர்வகிக்க ஒப்பந்தம் விடுக்கப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு குப்பை கழிவுகளை நிர்வகிக்க விடுக்கப்பட்ட டெண்டர் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கிய பணத்திலும் முறைகேடுகள் நடந்துள்ளது. இந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு, டி.ஆர்.ரமேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.

விசாரணைக்கு உத்தரவு

இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, நகர வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் ராஜேஸ் சிங்குக்கு முதல்-மந்திரி சித்தராமையா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது கடந்த 4 ஆண்டுகளில் பெங்களூருவில் குப்பை கழிவுகளை நிர்வகிப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி ராஜேஸ் சிங்குக்கு, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அத்துடன் குப்பை கழிவுகளை நிர்வகிப்பது குறித்து புதிதாக எந்த ஒரு டெண்டரும் விடக்கூடாது என்றும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு இருக்கிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு ரூ.468 கோடியில் நகரில் தொடங்கப்பட்ட 6 குப்பை கழிவு மறுசுழற்சி மையங்கள் செயல்படாமல் உள்ளது. பசுமை நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளையும் குப்பை கழிவுகளை நிர்வகிக்கும் விவகாரத்தில் பின்பற்றவில்லை. குப்பை கழிவுகளை நிர்வகிக்க மாநகராட்சி ரூ.1,100 கோடி செலவு செய்திருக்கிறது. இவ்வாறு செலவு செய்திருப்பதில் நடந்த முறைகேடுகள் குறித்து தான் முதல்-மந்திரி சித்தராமையா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.


Next Story