சிக்கிம் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.! மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரம்


சிக்கிம் வெள்ள பாதிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு.! மாயமானவர்களை தேடும் பணிகள் தீவிரம்
x

சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கேங்டாக்,

சிக்கிம் மாநிலத்தின் வடக்கு பகுதியில் நேபாள எல்லை அருகே உள்ள லோனக் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், மிக குறுகிய நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டியது. 5 நிமிடங்களுக்குள் மிகப் பெரிய அளவுக்கு மழை பெய்ததால் அங்குள்ள தீஸ்தா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இரு கரைகளையும் உடைத்துக்கொண்டு வெள்ளம் சீறிப் பாய்ந்தது. இந்த வெள்ளம் கேங்டாக், மங்கன், பாக்கியாங், நாம்சி ஆகிய 4 மாவட்டங்களில் புகுந்து கடும் சேதங்களை ஏற்படுத்தியது. மேலும், மாநிலத்தில் 14 பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்குவரத்து முடங்கி உள்ளது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான 23 ராணுவ வீரர்களில் ஒரு ராணுவ வீரர் இன்று அதிகாலை மீட்கப்பட்டார். மற்ற வீரர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. தீஸ்தா நதி வெள்ளம் பாய்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டவர்களில் 102 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. சிக்கிமில் மேலும் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story