மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், சிறு-குறு தொழில் சங்கம் கோரிக்கை


மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், சிறு-குறு தொழில் சங்கம் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2022 10:17 PM GMT (Updated: 20 Sep 2022 10:41 PM GMT)

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், சிறு-குறு தொழில் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னை,

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தலைவர் மாரியப்பன், பொதுச்செயலாளர் வி.நித்தியானந்தன் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் ராஜேஷ் லக்கானி உடனிருந்தார்.

இந்த சந்திப்பில் மின்சார கட்டண உயர்வால் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சங்க நிர்வாகிகள் எடுத்துரைத்தனர். மேலும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான உச்சநேர கால அளவை முழுமையாக விலக்கிக்கொள்ள வேண்டும், நிலையான கட்டணத்தை வசூலிக்க கூடாது, ஆண்டுதோறும் 6 சதவீத மின் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்க கூடாது, தொழிற்சாலைகள் செயல்படாத காலங்களில் நிலையான கட்டணம் வசூலிக்க கூடாது, புதிய மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம், நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இந்த கோரிக்கைகளை முதல்-அமைச்சர் கவனத்துக்கு எடுத்துச்சென்று நல்லதொரு முடிவை அறிவிப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நமது கோரிக்கைகள் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவார காலத்துக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழக அரசின் சார்பில் முடிவு வரும் வரை தொழிற்சாலைகள் சார்பில் யாரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டாம்'', என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story