மியான்மர் அரசியல் நெருக்கடி எதிரொலி: மிசோரமில் அதிகரிக்கும் கடத்தல் நடவடிக்கை..!
மியான்மரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியால் மிசோரமில் கடத்தல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிசோரம்:
வனவிலங்குகளை சட்டவிரோதமாக கடத்துவதற்கு எதிரான நடவடிக்கையில் மிசோரம் போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று அயல்நாட்டு வனவிலங்குகளை மீட்டனர். இந்த விலங்குகள் மியான்மரில் இருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மியான்மரில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள், வெளிநாட்டு புகையிலை மற்றும் வனவிலங்குகள் உள்ளிட்ட கடத்தல் பொருட்களுக்கான நுழைவாயிலாக சம்பாய் காணப்படுகிறது. மிசோரமின் சம்பாய் மாவட்டம் வனவிலங்கு வர்த்தகத்தின் புதிய இடமாக மாறியுள்ளது. ராணுவ ஆட்சி பதவியேற்றதில் இருந்து மியான்மரில் இருந்து பல விலங்குகள் கடத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி வரை, மாநில காவல்துறை 22.93 கிலோ ஹெராயின் மற்றும் 101.26 கிலோ மெத்தம்பெட்டமைன் மாத்திரைகள் உட்பட பல்வேறு போதைப்பொருட்களை மீட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 39 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தல் குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரி ஒருவர் கூறியதாவது,
மியான்மரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியானது மிசோரமில் "கடத்தல் நடவடிக்கைகள் அதிகரிப்பதற்கு" வழிவகுத்துள்ளது, மேலும் வடகிழக்கு மாநிலத்தில் கடத்தல் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு விலங்கு இனங்கள் கைப்பற்றப்படுவதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது.
மாநில அரசின் தரவுகளின்படி, கலால் துறை மற்றும் மாநில காவல்துறையால் 2020 ஆம் ஆண்டு மீட்கப்பட்ட ஹெராயின் அளவு 20.36 கிலோ ஆகும். அதுவே கடந்த ஆண்டு மீட்கப்பட்ட ஹெராயின் அளவு சுமார் 34.52 கிலோவாக அதிகரித்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில், 19.81 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடத்தல் பொருட்களை வைத்திருந்ததாக 374 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பலர் தற்போதைய அரசியல் நெருக்கடியால் வேலையில்லாமல் உள்ளனர் மற்றும் நிலையான வருமான ஆதாரங்கள் இல்லை. அவர்களில் பலர் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஈர்க்கப்பட்டனர் என கூறினார்.