ஒரே மரக்கிளையில் தினமும் ஓய்வெடுக்கும் பாம்பு


ஒரே மரக்கிளையில் தினமும் ஓய்வெடுக்கும் பாம்பு
x

பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் ஒரே மரக்கிளையில் தினமும் வந்து ஒரு பாம்பு ஓய்வெடுத்து செல்லும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அதை தரிசனம் செய்யும் பக்தர்களையும் அந்த பாம்பு சீண்டுவதில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனேக்கல்:

பெங்களூரு அருகே ஆனேக்கல்லில் ஒரே மரக்கிளையில் தினமும் வந்து ஒரு பாம்பு ஓய்வெடுத்து செல்லும் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அதை தரிசனம் செய்யும் பக்தர்களையும் அந்த பாம்பு சீண்டுவதில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கிளையில் ஓய்வெடுக்கும் பாம்பு

பொதுவாக கோவில்களில் இருக்கும் புற்றுகளில் திடீரென்று பாம்பு தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது எப்போதாவது நடைபெறுவது உண்டு. இந்த நிலையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல்லில் மரத்தின் கிளையில் அமர்ந்து தினமும் ஒரு பாம்பு ஓய்வெடுத்து செல்லும் அதிசயம் நடந்து வருகிறது.

ஆனேக்கல் தாலுகா நாராயணபுரா கிராமத்தில் உள்ள ஆசிரமத்தின் முன்பாக இருக்கும் ஒரு மரத்தின் கிளையில் தான் தினமும் ஒரு நாகபாம்பு வந்து ஓய்வெடுத்து வருகிறது. அந்த நாகபாம்பு காலையில் எத்தனை மணிக்கு கிளையில் வந்து அமருகிறது, அங்கிருந்து எப்போது, எப்படி செல்கிறது? என்பது தெரியவில்லை.

2 மாதமாக ஒரே மரக்கிளையில்...

ஆனால் கடந்த 2 மாதங்களாக ஒரே மரத்தில், ஒரே கிளையில் வந்து தான் அந்த நாகபாம்பு ஓய்வெடுப்பதாக கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். அந்த நாகபாம்பை நாராயணபுரா, அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் கிராம மக்கள் வந்து பார்த்து செல்வதுடன், பக்தியுடன் வணங்கியும் செல்கிறார்கள். இவ்வாறு மரத்தின் முன்பாக திரண்டு தரிசனம் செய்பவர்களை அந்த நாகபாம்பு சீண்டுவதில்லை. ஓய்வெடுத்து மட்டும் செல்கிறது.

வெயில் அதிகமாக இருந்தால் கூட மரக்கிளையில் இருந்து செல்லாமல், அப்படியே அந்த பாம்பு இருக்கும் என்று கிராம மக்கள் கூறியுள்ளனர். முந்தைய காலத்தில் ஆசிரமம் அருகே நாகதேவதை கோவில் இருந்திருக்கலாம் என்றும், அதனால் நாகபாம்பு அங்கு வந்து செல்வதாகவும், தினமும் ஒரே பாம்பு தான் வருகிறதா?, வெவ்வேறு பாம்பு வருகிறதா? என்பது தெரியவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

யாரையும் சீண்டுவதில்லை

இதுகுறித்து கிராமத்தை சேர்ந்த கவுரம்மா கூறுகையில், 'கடந்த 2 மாதங்களாக தினமும் அந்த மரக்கிளைக்கு நாகபாம்பு வந்து விடும். காலை 10 அல்லது 11 மணிக்கு வரும். மாலை 5 மணிக்கு சென்று விடும். மக்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கத்தான் செய்யும். மரக்கிளையில் இருந்து கொஞ்சம் கூட நகராது. இதுவரை யாரையும் அந்த பாம்பு சீண்டியதில்லை. எதற்காக வருகிறது என்றும் தெரியவில்லை', என்றார்.

மரக்கிளையில் அமர்ந்து நாகபாம்பு ஓய்வெடுக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story