வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் எனது புகழை கெடுக்க முயற்சி - பிரதமர் மோடி
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் தனது புகழை கெடுக்க சிலர் முயற்சிப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
வந்தே பாரத் ரெயில் சேவை
நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரெயில்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. மத்திய பிரதேசத்தின் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா நடந்தது.
போபாலில் உள்ள ராணி கமலாபதி ரெயில் நிலையத்தில் நடந்த இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டு
நிகழ்ச்சியில் பேசும்போது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
2014-ம் ஆண்டில் இருந்தே எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் உறுதியுடன் சிலர் பணியாற்றுகின்றனர். இதற்காக அவர்கள் உள்நாட்டிலும், நாட்டுக்கு வெளியேயும் குறிப்பிட்ட சிலருடன் கூட்டுச்சேர்ந்து ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக சிலர் நாட்டிற்குள்ளேயே அமர்ந்து கொண்டும், சிலர் வெளியில் இருந்தும் தங்கள் பணியை செய்து வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து மோடியின் புகழை கெடுக்கவும், களங்கப்படுத்தவும் முயற்சித்து வருகின்றனர்.
பாதுகாப்பு கவசம்
ஆனால் இந்தியாவின் ஏழைகள், நடுத்தர மக்கள், பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஒவ்வொரு இந்தியரும் மோடியின் பாதுகாப்பு கவசமாக மாறியுள்ளனர். தனது சாதனைகளுடன் அரசும் பதிலளித்தது. இது, புதிய தந்திரங்களைக் கடைப்பிடிக்கத் தூண்டும் இந்த மக்களை ஆத்திரமடையச் செய்தது. அவர்கள் நடுங்குகிறார்கள். அதனால்தான் எனது கல்லறையைத் தோண்டுவது பற்றி பேசப்படுகிறது.
21-ம் நூற்றாண்டு இந்தியா புதிய சிந்தனையுடன் செயல்படுகிறது. முந்தைய அரசுகள் திருப்திப்படுத்துவதில் மட்டும் மும்முரமாக இருந்தன. அந்த அரசுகள் ஒரு குடும்பத்தை நாட்டின் முதல் குடும்பமாகக் கருதினர். ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை புறக்கணித்தார்கள்.
ரெயில்வே இதற்கு வாழும் உதாரணமாக உள்ளது. ரெயில்வேத்துறையை முன்னரே நவீனப்படுத்தியிருக்க வேண்டாமா? முந்தைய அரசுகள் அவ்வாறு விரும்பியிருந்தால் நிறைவேற்றியிருக்க முடியும்.
பட்ஜெட்டில் பிரதிபலிப்பு
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ரெயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். உலக அளவில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம். சமீபத்திய பட்ஜெட்டில் உள்ள திட்டங்களில் கூட இது பிரதிபலிக்கிறது.
பயணிகளின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. ரெயில் பாதைகளின் மின்மயமாக்கல், நிலையங்கள் நவீனமயமாக்கலுடன், கண்காணிப்பு கேமரா, வை-பை வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. ரெயில்கள் மற்றும் நிலையங்களின் தூய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் புகார்களுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டின் ரெயில்வே துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களுக்கு பயண வசதியை ஏற்படுத்துவதே அரசின் நோக்கம் ஆகும். இந்த வந்தே பாரத் ரெயில் நமது திறமை மற்றும் தன்னம்பிக்கையின் சின்னம். இது போபால் மற்றும் சுற்றுப்புறங்களில் சுற்றுலாவை மேம்படுத்தும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் வளரும் ஆர்வத்தையும் குறிக்கிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கவர்னர் மங்குபாய் படேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.