கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைகிறது; கடலோர மாவட்டங்களில் கனமழை


கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைகிறது; கடலோர மாவட்டங்களில் கனமழை
x

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கனமழையால் கடலோர பகுதி வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர்.

பெங்களூரு:

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. ஆனால் ஜூன் மாதத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஆங்காங்கே கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. அதுபோல் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது.

இதனால் சில இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சி அளித்தன. குறிப்பாக பாகமண்டலாவுக்கு செல்லும் சாலை மிகவும் சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. அந்த சாலையில் அமைந்துள்ள மேம்பால கட்டுமான பணிகள் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.5 கோடி செலவில் தொடங்கப்பட்டது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இதுபோல் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.


அதுபோல் கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மங்களூரு டவுன் பகுதியில் சாலைகளை மூழ்கடித்தபடி மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நின்றது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனர். மேலும் கனமழையால் மங்களூரு டவுன் பகுதி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இந்தநிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள 3 தாலுகாக்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.

உடுப்பி-பர்கூர் ெரயில் தண்டவாளத்தில் மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரங்களை வெட்டி அகற்றினர். இதனால் புதுடெல்லி- கேரளா இடையே இயக்கப்படும் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் குந்தாப்புரா தாலுகா தெக்கட்டே மல்லியாடி பகுதியை சேர்ந்த திவாகர் ஷெட்டி(வயது 65) நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கனமழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் திவாகர் ஷெட்டியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் உள்ள குளத்தில் பாய்ந்தது. இதில் திவாகர் ஷெட்டி தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திவாகர் ஷெட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இதேபோல் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் தாலுகா சென்டியா கிராமத்தை சேர்ந்தவர் தாராமதி நாயக்(வயது 75). இவர் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்தப்பகுதியில் தேங்கிய மழைநீரில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே தராமதி நாயக் இறந்தார்.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் தாலுகா சோமேஸ்வரா- பீலாரு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் கட்டி (வயது52). கூலித்தொழிலாளியான இவர் நேற்றுமுன்தினம் மாலை வேலை முடிந்து விட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது சுரேஷ் கால்வாயை கடக்க முயன்றார். அப்போது அவர் கால்வாயில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார்.


தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உல்லால் பெல்மா கிராமத்தில் பெய்த கனமழையால் சாலையோரம் மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அந்த கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்போில் மின்சார வாரிய ஊழியர்கள் வசந்த், சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் குளத்தின் நடுவே உள்ள மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்தனர். அவர்கள் பழுதை சரிசெய்ய இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதேபோல் தளப்பாடிபகுதிகளில் பெய்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. தளப்பாடி கிராமம் மக்யார் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் பெய்த பலத்த மழையால் விவசாய நிலம் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

தட்சிண கன்னடா மாவட்டம் சோமேஸ்வர் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிபைல், கும்பாலா பர்டே, அஞ்சிகட்டே பகுதியில், காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள 4 வீடுகள் மீது மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த வீடுகள் சேதம் அடைந்தன. அஞ்சிகட்டையில் வீட்டின் அருகே நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மீது மரம் முறிந்து விழுந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.

வெள்ளம் சூழ்ந்தது

உடுப்பி டவுனில் தாழ்வான பகுதிகள் மழைவெள்ளத்தில் மூழ்கின. மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான ஹெப்ரி மற்றும் கார்கலாவில் உள்ள சுவர்ணா ஆற்று பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் பாஜே தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது மேலும் கோடி சென்னையா கோவிலில் மழை வெள்ளம் புகுந்தது. உடுப்பியில் பெய்து வரும் தொடர் மழையால் மூட நிடம்பூர் கோவில், கிருஷ்ணன் கோவில் ஆகிய கோவில்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

உல்லால் பகுதியில் பெய்த கனமழையால் அரபிக் கடலில் ராட்சத அலைகள் ஏற்பட்டது. கடற்கரையையொட்டி உள்ள வீடுகள், கடைகள் மழையில் அடித்து செல்லப்பட்டன. சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் முறிந்து விழுந்தன. மொகவீரப்பட்டணா கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. உச்சிலா, பட்டம்பாடி கடற்கரையில் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதுபோல் உத்தர கன்னடா மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. கனமழையால் பட்கல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை மூழ்கடித்தபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அங்குள்ள ஒரு பாலத்தில் கீழ் தேங்கிய மழை நீரில் சிறுவர்கள் நீச்சலடித்து விளையாடினர். அந்த அளவிற்கு அங்கு மழை வெள்ளம் தேங்கி இருந்தது. மேலும் ரங்கினகட்டே, சம்சுதீன் சாலை, சிரா ஆகிய பகுதிகளிலும் தேசிய நெடுஞ்சாலையை மழை வெள்ளம் மூழ்கடித்தபடி கரைபுரண்டு ஓடியது.

மேலும் ஒன்னாவர் டவுன் பிரபாத் நகரில் பிரகாஷ் மேஸ்தான் என்பவரின் வீட்டின் மீது தென்னை மரம் சரிந்து விழுந்தது. மோல்கோடு கிராமத்தில் வசித்து வரும் மணிகண்டா நாயக் என்பவரின் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்து பெரிய சேதத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.


ஒன்னாவர் தாலுகா அப்சரகொண்டா கிராமத்திற்கு செல்லும் வழியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்சரகொண்டா கிராமத்திற்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. அங்கு மீட்பு பணிகளை பேரிடர் மீட்பு குழுவினர் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த கிராமத்தில் ஆபத்தான பகுதியில் வசித்து வருவதாக கருதப்படும் 11 குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

மேலும் ஹாசன் மாவட்டத்திலும் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதனால் ஹேமாவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இருந்தது. மொத்தத்தில் கர்நாடக கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தென் கர்நாடக மாவட்டங்களிலும், கர்நாடகத்தில் மலைநாடு மற்றும் உள் மாவட்டங்களிலும் போதிய அளவு மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கர்நாடக கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது இன்று (வியாழக்கிழமை) முதல் 7-ந்தேதி (சனிக்கிழமை) வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி அம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' (மிக அதிக கனமழை) எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு(மில்லி மீட்டரில்) பின்வருமாறு:-

தட்சிண கன்னடா-101.3, உடுப்பி-131.0, உத்தர கன்னடா-55.3, பட்கல்-148.8, பெல்தங்கடி-114.3, பண்ட்வால்-123.1, மங்களூரு-97.6, புத்தூர்-90.8, சுள்ளியா-70.7, மூடபித்ரி-143.0, கடபா-77.5, கார்கலா-124.3, குந்தாப்புரா-97.7, பைந்தூர்-151.6, பிரம்மாவர்-106.9, காபு-130.7, ஹெப்ரி-116.6, ஒன்னாவர்-126.4, கார்வார்-102.6, குமட்டா-94.7.


Next Story