கடைக்கோடி மனிதரையும் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் - பிரதமர் மோடி


கடைக்கோடி மனிதரையும் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் - பிரதமர் மோடி
x

கடைக்கோடி மனிதரையும் நலத்திட்டங்கள் சென்றடைய பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

200 மாவட்டங்களில் அடிப்படை வசதிகள்

கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இந்த ஆண்டு பட்ஜெட்டில், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் கடைக்கோடி மனிதரையும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பழங்குடியினரிடையே மிகவும் பின்தங்கியவர்களுக்கு முதல்முறையாக சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டின் 200 மாவட்டங்களில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் பழங்குடியினருக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட உள்ளன.

நாம் நல்ல நிர்வாகத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு கடைக்கோடி மனிதரையும் சென்றடையும் லட்சியத்தை எட்டி விடலாம்.

வீட்டுக்கே வரும் அரசு

முன்பெல்லாம், அடிப்படை வசதிகளுக்காக அரசாங்கத்தின் பின்னால் மக்கள் ஓட வேண்டி இருந்தது. தற்போது, ஏழைகளின் வீட்டுக்கே வந்து அரசு உதவுகிறது. அதற்கு கொரோனா தடுப்பூசி திட்டமே நல்ல உதாரணம். நல்ல நிர்வாகத்தின் வலிமையால், கடைக்கோடி மனிதரையும் எட்டலாம் என்று நிரூபிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீது விவாதம் நடத்துவது முக்கியம்தான். கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு இன்னும் ஒருபடி மேலே சென்று, சம்பந்தப்பட்ட பலதரப்பினருடன் பட்ஜெட்டுக்கு பின்பு ஆலோசனை நடத்தி வருகிறது. வரி செலுத்துவோரின் ஒவ்வொரு ரூபாய் பணமும் முறையாக பயன்படுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.

60 ஆயிரம் ஏரிகள்

ஜல்ஜீவன் திட்டத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏரிகள் கட்டும் பணி தொடங்கி உள்ளது. அவற்றில் 30 ஆயிரம் ஏரிகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டு விட்டன.

தண்ணீர் தேவைக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் உட்புற பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த இவை பயன்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story