ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிரதமர் மோடி பேச்சு


ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்:  பிரதமர் மோடி பேச்சு
x

ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 40 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என பிரதமர் மோடி பேசி உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டில் வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் ரோஜ்கார் என்ற வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதியன்று பிரதமர் மோடி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 75 ஆயிரம் பேருக்கு வேலை வழங்குவதற்கான பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

இந்த திட்டம், இளைய தலைமுறையினரிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு முறையும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசில் வேலைவாய்ப்பை பெற்று வருகிறார்கள்.

இதன்படி, பிரதமர் மோடி மெய்நிகர் காட்சி வழியே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் 71 ஆயிரம் பேருக்கு, மத்திய அரசில் பணியாற்றுவதற்கான பணி நியமனத்திற்கான ஆணைகள் அடங்கிய கடிதங்களை இன்று வழங்கினார்.

ரெயில் மேலாளர், ரெயில் நிலைய அதிகாரி, சீனியர் வணிகவியல் மற்றும் டிக்கெட் கிளார்க், ஆய்வாளர், உதவி இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள், அஞ்சல் உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள், வரி உதவியாளர்கள், மேற்பார்வையாளர்கள், உதவி பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், செவிலியர்கள், நன்னடத்தை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

மேலும், புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள், 'கர்மயோகி பிரராம்ப்' என்கிற ஆன்லைன் பயிற்சியின் மூலம் பயிற்சி பெற்று கொண்டு பணியாற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சியில் அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள், மனித வள கொள்கைகள் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இதனை தொடர்ந்து புதிதாக பணி நியமனம் செய்யப்படுகிறவர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசும்போது, நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் ஆத்மநிர்பார் பாரத் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பொம்மை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் உற்பத்தி ஆலையானது முன்னணி வகிக்கிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பைசாகி நன்னாளில் வேலை வாய்ப்புகளை பெற்று உள்ளனர்.

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள். தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அரசு வேலைகளை வழங்குவது விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் மட்டுமே 22 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை நேற்று வழங்கப்பட்டு உள்ளது.

ஓர் அறிக்கையின்படி, ஸ்டார்ட்அப் நிறுவனங்களால் 40 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன என தெரிய வந்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.


Next Story