108 அடி உயரத்தில் புலி வாகனத்தில் மலை மாதேஸ்வரா சாமி சிலை திறப்பு


108 அடி உயரத்தில் புலி வாகனத்தில் மலை மாதேஸ்வரா சாமி சிலை திறப்பு
x

மலை மாதேஸ்வரா கோவிலில் புலி வாகனத்தில் மலை மாதேஸ்வரா சாமி அமர்ந்துள்ள 108 அடி உயர சிலையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

கொள்ளேகால்:

மலை மாதேஸ்வரா கோவிலில் புலி வாகனத்தில் மலை மாதேஸ்வரா சாமி அமர்ந்துள்ள 108 அடி உயர சிலையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

மலை மாதேஸ்வரா கோவில்

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மலை மாதேஸ்வரா கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். சிவராத்திரி, யுகாதி, தசரா போன்ற திருவிழா காலங்களில் கர்நாடகம் மட்டுமின்றி தமிழகத்தில் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு சென்று வருவார்கள்.

இந்த கோவில் அருகே அமைந்துள்ள ஒரு மலையின் மீது ரூ.20 கோடி செலவில் 108 அடி உயரத்தில் பீடத்துடன் கூடிய புலி வாகனத்தில் மலை மாதேஸ்வரா சாமி அமர்ந்துள்ளது போல் உருவச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

108 அடி உயர சிலை

இதில் 27 அடி உயரத்தில் குகை போன்ற அமைப்புடன் பீடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குகையில் தியான மண்டபம், மலை மாதேஸ்வரா சாமியின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. குகையின் மேல் இருந்து அதாவது பீடத்தின் மேல் 81 அடி உயரத்தில் புலியின் மீது மலை மாதேஸ்வரா சாமி உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் ரூ.3 கோடியே 50 லட்சம் செலவில் வெள்ளி தேர், சாமி ஊர்வலத்திற்காக தயார் செய்யப்பட்டுள்ளது. வெள்ளி தேர் மற்றும் புலியின் மீது மலை மாதேஸ்வரா அமர்ந்துள்ள உருவச்சிலையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நடந்த விழாவில் பக்தர்கள் தரிசிக்க பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதையொட்டி அவர் விழா மேடையில் குத்துவிளக்கேற்றினார்.

முன்னதாக பீடம் உள்ள பகுதியில் 27 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும் விழா மேடையானது பீடத்தின் மேலே புலி சிலையின் அருகே அமைக்கப்பட்டிருந்தது. இந்த விழா மேடைக்கு கிரேன் மூலம் முதல்-மந்திரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்றனர்.

வெள்ளி தேரோட்டம்

பின்னர் வெள்ளி தேரோட்டம் நடந்தது. இதில் மந்திரி சோமண்ணா சித்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி, கோவில் செயலாளர் காத்யாயினி தேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விரைவில் இந்த குகை அமைந்துள்ள பீடத்தின் மேல் படிக்கட்டு அமைத்து புலியின் கால் பகுதிக்கு சென்று பக்தர்கள் தரிசிக்கவும், ரோப்கார் வசதி ஏற்படுத்தவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நம்பிக்கை தெய்வம்

இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-

சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு இந்த மாதத்தில் மட்டும் 2 முறை வந்துவிட்டேன். இது மலை மாதேஸ்வராவின் அருள் என்று நினைக்கிறேன். மலை மாதேஸ்வராவின் சிலையை திறந்து வைப்பதில் பெருமை கொள்கிறேன். இந்த மலை மாதேஸ்வரா சாம்ராஜ்நகர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் உள்ள மக்களின் நம்பிக்கை தெய்வமாக விளங்கி வருகிறது. இந்த சிலை மாநில அரசின் ஒரு சாதனை ஆகும். பா.ஜனதாவின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் இந்த மலை மாதேஸ்வரா சிலை உள்ளது.

இந்த கோவிலுக்கு சாதி, மத வேறுபாடு இன்றி மக்கள் வந்து, பக்தியுடன் மலை மாதேஸ்வராவை வழிபட்டு வருகிறார். இந்த சிலை உயிரோட்டத்துடன் இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதனின் ஆன்மிக உணர்ச்சியை இந்த சிலை தூண்டும். இந்த சிலையை வடிவமைத்தவர்களுக்கு அதற்கான பலன் வந்து சேரும். மலை மாதேஸ்வரா கோவிலில் ரூ.100 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story