வந்தே பாரத் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீச்சு


வந்தே பாரத் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீச்சு
x

கர்நாடகத்தில் வந்தே பாரத் ரெயில் உள்பட 2 ரெயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஆஷா திட்ட பெண் ஊழியர் காயம் அடைந்தார்.

பெங்களூரு:-

வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு

இந்தியாவில், இரு நகரங்கள் இடையே பயண நேரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதுபோல் கர்நாடகத்தில் மைசூரு-சென்னை இடையேயும், பெங்களூரு-தார்வார் இடையேயும் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரெயில்கள் மீது மர்ம

நபர்கள் கல்வீச்சு தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

அதுபோல் மைசூரு-சென்னை இடையே இயங்கும் வந்தே பாரத் ரெயில் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர். அதாவது அந்த ரெயில் பெங்களூரு-கண்டோன்மென்ட் இடையே வந்த போது கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதில் ஜன்னல்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதையடுத்து தார்வார்-பெங்களூரு வந்தேபாரத் ரெயில் மீது கடந்த 1-ந்தேதி தாவணகெரே புறநகர் பகுதியில் வைத்து மர்மநபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் சி.4 பெட்டியின் ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

மைசூரு-சென்னை வந்தே பாரத் ரெயில்

இந்த நிலையில் மைசூரு-சென்னை வந்தே பாரத் ரெயில் நேற்று முன்தினம் மைசூருவில் இருந்து புறப்பட்டு ராமநகர் வழியாக சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ராமநகர் மாவட்டம் வதேரஹள்ளி பகுதியில் அந்த ரெயில் வந்த போது மர்மநபர்கள் யாரோ கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ரெயிலின் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. நல்ல வேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக மண்டியா ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, வந்தே பாரத் ரெயில் மீது கல்வீசி தாக்கிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். வந்தே பாரத் ெரயில் மீது தொடர்ந்து கல்வீசி தாக்குதல் நடத்தும் சம்பவம் அதிகரித்து வருவதால் ரெயில்வே போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கல்வீச்சில் பெண் காயம்

இதற்கிடையே கலபுரகி (மாவட்டம்) சிட்டி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை பீதர் நோக்கி பயணிகள் ரெயில் புறப்

பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் கலபுரகி அருகே சுல்தான்பூர் ரெயில் நிலையத்தின் அருகில் வந்த போது மர்மநபர்கள் கல்வீசி தாக்கினர்.

இதில் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி உடைந்து நொறுங்கியதுடன், அந்த பெட்டியில் பயணம் செய்த பெண் ஒருவரின் கழுத்தை மர்மநபர்கள் வீசிய கல் பதம் பார்த்தது. இதில் அவர் கழுத்தில் ரத்த காயம் அடைந்தார். உடனே சக பயணிகள் அந்த பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

ஆஷா திட்ட பெண் ஊழியர்

இந்த சம்பவம் தொடர்பாக சுல்தான்பூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயில் மீது கல்வீசிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

போலீஸ் விசாரணையில், கல்வீச்சு சம்பவத்தில் காயமடைந்தவர் கலபுரகியை சேர்ந்த சுமித்ரா என்பதும், இவர் வீடுகள் தோறும் சென்று முதியவர்கள், கர்ப்பிணிகள் கணக்கெடுப்பில் ஈடுபடும் ஆஷா திட்டத்தில் ஊழியராக பணியாற்றி வருவதும், நேற்று அவர் பீதருக்கு ரெயிலில் சென்ற போது இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.


Next Story