திருப்பதியில் புயல் மழை.. வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர்
ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளகஸ்தி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
திருப்பதி,
மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளகஸ்தி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
திருப்பதி கென்னடி நகரில் சாலையோரம் இருந்த மரங்கள் வேரோடு சாய்ந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது விழுந்ததால் கார்கள் சேதம் அடைந்தன. ஆங்காங்கே மின்சார கம்பங்கள் விழுந்ததால் இரவு 11 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருப்பதி முழுவதும் இருளில் மூழ்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இதையடுத்து மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு காலை 7 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. ஜெய்பீம் காலனி, கென்னடி நகர், லட்சுமி புரம் சர்க்கிள் பகுதிகளில் சரியானபடி மழை நீர் வடிகால் இல்லாததால் வீடுகளுக்குள் இடுப்பளவு மழை வெள்ளம் புகுந்தது. இரவு முழுவதும் தூக்கம் இன்றி விடிய விடிய பொதுமக்கள் தவித்தனர்.
இன்று காலை திருப்பதி எம்.எல்.ஏ. மோகன கருணாகரன் ரெட்டி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மாநகராட்சி ஊழியர்களின் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். இதேபோல் திருமலையிலும் பலத்த மழை கொட்டி வருகிறது.
சில்லென்று குளிர் காற்று வீசுவதால் தரிசனத்திற்கு வந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் குளிரில் சிரமம் அடைந்து தரிசனம் செய்து வருகின்றனர். சித்தூர், மதனப்பள்ளி, திருப்பதி, குப்பம் பீலேரு, காளஹஸ்தி உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.