ரெயிலில் கல்லூரி மாணவியின் திடீர் முனகல் சத்தம்... உதவிக்கு ஓடிய பெண் டிக்கெட் பரிசோதகர்கள்
மும்பை புறநகர் ரெயிலில் திடீரென முனகிய 19 வயது கல்லூரி மாணவியின் சத்தம் கேட்டு பெண் டிக்கெட் பரிசோதகர்கள் உதவிக்கு ஓடியுள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் தினசரி வேலை மற்றும் படிப்புக்காக புறநகர் ரெயிலில் பயணிகள் செல்வது வழக்கம். இதனால், காலை வேளையில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்த நிலையில், மத்திய ரெயில்வேக்கு உட்பட்ட உள்ளூர் ரெயிலில் பயணிகளிடம் பெண் டிக்கெட் பரிசோதகர்கள் 2 பேர் சோதனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். ரெயிலில் பயணித்த இளம்பெண் ஒருவர் திடீரென வலியால் முனகியுள்ளார்.
இதனை கவனித்த 2 பேரும் உடனடியாக அவரிடம் ஓடினர். இதன்பின்பு, நிலைமையை கவனித்த அவர்கள் இருவரும் தானே ரெயில் நிலைய மேலாளரிடம் தகவல் தெரிவித்து மருத்துவ உதவி கோரியுள்ளனர்.
ரெயில் தானேவை நெருங்கியதும் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. நிலைமை மோசமடையவே ரெயில்வே போலீசார் மற்றும் பயணி ஒருவர் உதவியுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்டார். அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஐரோலி பகுதியில் ரெயிலில் ஏறிய அந்த இளம்பெண்ணின் பெயர் பிங்கி ராய். கஜ்ராத் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அவர் படித்து கொண்டே, கன்சோலியில் உள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்த நிலையில், ரெயிலில் அவர் வீட்டுக்கு திரும்பியுள்ளார். தானே நகரில் இறங்கி அவர் வேறு ரெயிலை பிடிக்க வேண்டும். எனினும், அதற்கு முன்பு இந்த சம்பவம் நடந்து உள்ளது.
டிக்கெட் பரிசோதகர்களான தீபா வைத்யா மற்றும் ஜெயின் மார்செல்லா இருவரும் சரியான தருணத்தில் உதவியதற்காக பிங்கியின் தாயார் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார். கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் ஆண், பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் இடையே மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து காணப்படுகிறது.