முதல் மனைவியுடன் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை


முதல் மனைவியுடன் ராணுவ வீரர் தூக்குபோட்டு தற்கொலை
x

2-வது திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியுடன் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஹாசன்:

2-வது திருமணம் செய்த நிலையில் முதல் மனைவியுடன் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விதவை பெண்ணிற்கு வாழ்க்கை

ஹாசன் டவுனை சேர்ந்தவர் ஆஷா. கணவரை இழந்த இவர் தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். மேலும் அழகு கலை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆஷாவுக்கும் அதேப்பகுதியை சேர்ந்த கிரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கிரண் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். 3 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆஷாவை கிரண் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் கிரணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் திருமணம் முடிந்த சில நாட்களில் கிரண் ராணுவத்துக்கு சென்றுவிட்டார்.

2-வது திருமணம்

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கிரண், சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அப்போது கிரணின் மனதை அவரது பெற்றோர் மாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்கு கிரணும் ஒப்புக் கொண்டார். அதன்படி கடந்த திங்கட்கிழமை கிரணுக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நடந்தது.

இதுபற்றி அறிந்ததும் ஆஷா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் திருமண மண்டபத்துக்கு சென்று தகராறு செய்தார். அப்போது தான் கிரணுக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்ததும், அதனை மறைத்து 2-வதாக இளம்பெண்ணை திருமணம் செய்ததும் பெண் வீட்டாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், கிரணையும் அவரது குடும்பத்தினரையும் திட்டி வெளியே அனுப்பி விட்டனர்.

தற்கொலை

இந்த தகராறு பற்றி அறிந்ததும் ஹாசன் டவுன் போலீசார், இரு வீட்டாரையும் போலீஸ் நிலையத்துக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதனால் கிரணும், ஆஷாவும் பயந்து போயினர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் ஒங்காரே வனப்பகுதிக்கு சென்று அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர்.

இதற்கிடையே, கிரணையும், ஆஷாவையும் அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசிலும் புகார் கொடுத்தனர்.

இந்த நிலையில் கிரணின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒங்காரே வனப்பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஒங்காரே வனப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வனப்பகுதியில் உள்ள மரத்தில் கிரணும், ஆஷாவும் தூக்கில் பிணமாக கிடந்தனர்.

சோகம்

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story