வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு


வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைப்பு
x

வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுகேஷ் சந்திரசேகர் தொடர்ந்த வழக்கை 13-ந்தேதிக்கு சுப்ரீம் கோர்ட்டில் ஒத்திவைத்தது.

புதுடெல்லி,

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தன்னை வேறு சிறைக்கு மாற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பார்த்திவாலா ஆகியோர் அடங்கிய கோடை கால விடுமுறை அமர்வு முன்பு நேற்று நடந்தது.அப்போது நீதிபதிகள், 'விளக்க மனு தாக்கல் செய்துவிட்டீர்களா' என சுகேஷ் சந்திரசேகர் தரப்பு வக்கீல் வசந்திடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த வசந்த், 'விளக்க மனு ஜூன் 28-ந்தேதியே தாக்கல் செய்துவிட்டோம்' என்றார்.

அப்போது நீதிபதிகள் விளக்க மனு எங்களிடம் வந்து சேரவில்லை என்றனர். அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, 'சிறையில் இருந்துகொண்டே ரூ.300 கோடி அளவுக்கு மிரட்டி பணம் பறித்துள்ளார். சிறையில் கடுமையான நடவடிக்கைகள் எடுத்த பிறகு திகார் சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை வைத்துள்ளார்' என வாதிட்டார். அப்போது வக்கீல் வசந்த், 'மனுதாரரின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' என்றார். இதற்கு நீதிபதிகள், 'மனுதாரர் உயிருக்கு ஒன்றும் ஆகாது' என்று தெரிவித்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து இது தொடர்பான விசாரணையை வருகிற 13-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story