3.5 கி.மீ. நீள சரக்கு ரெயில் சோதனை ஓட்டம்: ரெயில்வே அசத்தல்


3.5 கி.மீ. நீள சரக்கு ரெயில் சோதனை ஓட்டம்: ரெயில்வே அசத்தல்
x

கோப்புப்படம் 

27 ஆயிரம் டன் நிலக்கரியுடன் 3.5 கி.மீ. நீள சரக்கு ரெயில் சோதனை ஓட்டத்தை ரெயில்வே நடத்தி உள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரெயில்வேயின் அங்கமாக சூப்பர் வாசுகி என்ற சரக்கு ரெயில் உள்ளது. இந்த சரக்கு ரெயிலின் சிறப்பம்சம், இது தான் நாட்டிலேயே மிக அதிக நீளமானதும், எடைகொண்டதுமான சரக்கு ரெயில் ஆகும். 5 சரக்கு ரெயில் ரேக்குகளைக் கொண்டு இந்த ரெயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் நீளம், கொஞ்சநஞ்சமல்ல 3½ கி.மீ. ஆகும். சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி இந்த ரெயிலின் சோதனை ஓட்டத்தை தென் கிழக்கு ரெயில்வே நடத்தி அசத்தி உள்ளது.

சோதனை ஓட்டத்தின்போது, 295 வேகன்களில் 27 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றப்பட்டு, சத்தீஷ்கார் மாநிலம், கொர்பாவில் இருந்து நாக்பூர் ராஜ்நந்த்காவ் இடையே 267 கி.மீ. தொலைவை இந்த ரெயில், 11.20 மணி நேரத்தில் கடந்தது. இந்த சூப்பர் வாசுகி சரக்கு ரெயிலில் ஏற்றப்படுகிற நிலக்கரியைக் கொண்டு ஒரு நாளில், 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

ஒரு ரெயில் நிலையத்தை இந்த ரெயில் கடக்க 4 நிமிடம் ஆகிறதாம். நிலக்கரிக்கு தேவை அதிகமாக உள்ள காலகட்டத்தில், மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாட்டை தடுக்க இத்தகைய ரெயில்களை அடிக்கடி பயன்படுத்த ரெயில்வே திட்டமிட்டுள்ளது.


Next Story