கர்நாடக அரசின் முஸ்லிம்களுக்கான தனி இடஒதுக்கீடு ரத்து முடிவுக்கு தடை நீட்டிப்பு
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட மாநில அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட மாநில அரசின் உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசியல் சாசன அமர்வு
கர்நாடகத்தில் இட ஒதுக்கீட்டு பட்டியலில் 2-பி பிரிவில் முஸ்லிம்களுக்கு 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கர்நாடக பா.ஜனதா அரசு இந்த இட ஒதுக்கீட்டை கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரத்து செய்து, அதை லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு தலா 2 சதவீதம் என பிரித்து வழங்கியது. இது தொடர்பாக கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு நேற்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்நாடக அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், 'இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பின் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய நான் தயாராக உள்ளேன். ஆனால் எனக்கு என்ன கஷ்டம் என்றால், அரசியல் சாசன அமர்வில் ஓரின சேர்க்கை வழக்கில் நான் ஆஜராக வேண்டியுள்ளது. அதனால் இந்த வழக்கை வேறு நாள் விசாரணைக்கு ஒத்திவைக்குமாறு கேட்கிறேன்' என்றார்.
இடைக்கால தடை நீட்டிப்பு
இதற்கு மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் துஷ்யந்த் தாவே கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதிடுகையில், 'சொலிசிட்டர் ஜெனரலின் இந்த வாதத்தை ஏற்க கூடாது. ஏற்கனவே இவ்வாறு 4 முறை வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது' என்றார். அதற்கு சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே மனுதாரருக்கு ஆதரவாக இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
அப்போது வக்கீல் துஷ்யந்த் தாவே, 'சொலிசிட்டர் ஜெனரலின் இந்த கருத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும்' என்று கேட்டார். இதை நீதிபதிகள் ஏற்று அந்த கருத்தை பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை முஸ்லிம்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை நீட்டிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.