'சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட பீகார் அரசுக்கு தடை விதிக்க முடியாது' - சுப்ரீம் கோர்ட்டு
சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட பீகார் அரசுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
பீகார் மாநிலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அம்மாநில அரசு கடந்த 2-ந்தேதி வெளியிட்டது. இந்த நிலையில் பீகார் அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு அனுமதி அளித்து பாட்னா ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி சாதிவாரி கணக்கெடுப்பின் தகவல்கள் சேகரிக்கப்படவில்லை என்றும், கணக்கெடுப்புக்கான விவரங்களை சேகரிப்பதில் முறையான நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சில தகவல்களை பீகார் அரசு வெளியிட்டதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டின் தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதால், கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் ஆட்சேபனையை நிராகரித்தனர். மேலும் எந்த ஒரு தனிநபரின் பெயர் மற்றும் மற்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை, அதனால் தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்ற வாதம் தவறானது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த விவகாரத்தை 2024-ம் ஆண்டு ஜனவரிக்கு பட்டியலிடுவதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பீகார் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.