காவிரி நீர் திறக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த வேண்டும்; மண்டியா விவசாயிகள் கோரிக்கை
காவிரி நீர் திறக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் வலியுறுத்த வேண்டும் என்று மண்டியா விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டியா:
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனதால் அணைகள் நிரம்பவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்பேரில் கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட்டது. 15 நாட்கள் திறக்க கூறிய நிலையில், 9 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதை கண்டித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினா், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். தண்ணீர் திறப்பை அரசு நிறுத்திய பிறகு, விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில், காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்று கர்நாடக அரசு இன்னும் தெளிவுப்படுத்தாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரையை கண்டித்தும், மாநில அரசை கண்டித்தும் கர்நாடகத்தில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர்.
மண்டியாவில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 3-வத நாளாக நேற்றும் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
மண்டியாவில் மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விவசாய பாதுகாப்பு நலக்குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் காவிரி படுகையில் உள்ள அணைகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால், எக்காரணம் கொண்டும் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டில் வருகிற 21-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என வலியுறுத்த வேண்டும் என்றனர்.
இதேபோல், மண்டியா டவுன் சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை முன்பு மாவட்ட விவசாயிகள், கன்னட அமைப்பினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், காவிரி ஒழுங்காற்று குழுவுக்கு எதிராகவும், முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி ஆகியோருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
மேலும் பாண்டவபுரா பகுதியில் சர்வோதயா கட்சி எம்.எல்.ஏ. தர்ஷண் புட்டண்ணய்யா தலைமையில் விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது தர்ஷன் புட்டண்ணய்யா எம்.எல்.ஏ. கூறுகையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் மாநில அரசு துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். தற்போதைய போராட்டங்கள் எந்த பலனையும் அளிக்கவில்லை.
போராட்டத்தின் தன்ைமயை மாற்ற வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக மாவட்டத்தின் அனைத்து விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் சேர்ந்து கூட்டம் நடத்தப்படும். குடிநீருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பலமுறை கூறி உள்ளது. அப்படி இருக்கும்போது காவிரி ஒழுங்காற்று குழு எவ்வாறு தண்ணீர் திறக்க பரிந்துரைக்க முடியும்?. காவிரியில் மீண்டும் தண்ணீர் திறக்கக்கூடாது. மீண்டும் தண்ணீர் திறந்தால் மண்டியாவில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.