குட்கா, புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது செல்லும்; சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்தது.
ஐகோர்ட்டில் வழக்கு
கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இதுசம்பந்தமாக அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதனால் அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.
ரத்து செய்து உத்தரவு
இந்த வழக்குகள் அனைத்தையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், குமரேஷ் பாபு அமர்வு, உணவு பாதுகாப்பு கமிஷனர் தனது அதிகாரத்தை மீறி புகையிலை பொருட்களுக்கு தடை விதித்துள்ளார் என்று கூறி அந்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மேலும் இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பில் வக்கீல் தேவயானி குப்தாவுடன் வக்கீல் ஜோசப் அரிஸ்டாட்டில் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
'சட்டத்தில் இடமில்லை'
நேற்று நடைபெற்ற விசாரணையின்போது புகையிலை நிறுவனங்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி, புகையிலை பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க சட்டத்தில் இடமில்லை. அப்படியே தடை விதித்தாலும், அதை ஓராண்டுக்கு மேல் நீட்டிக்க முடியாது. ஆனால் தமிழ்நாடு அரசு தொடர்ந்து 9 ஆண்டுகளாக இந்த தடையை நீட்டித்து வருகிறது. எனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவு சரிதான் என வாதிட்டார்.
உத்தரவுக்கு தடை
தமிழ்நாடு அரசின் சார்பில் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரியுடன் மூத்த வக்கீல் கபில் சிபல் ஆஜராகி, உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம், தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே ஐகோர்ட்டு உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.
தமிழ்நாடு அரசின் வாதத்தை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு, உணவு பாதுகாப்பு கமிஷனர் தனது அதிகாரத்தின்படி புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த ஆணையை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்தது.