புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - இன்று விசாரணை


புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - இன்று விசாரணை
x

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்ககோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

'சென்டிரல் விஸ்டா' என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து இதனை பிரதமர் நரேந்திரமோடி வருகிற 28-ந்தேதி திறந்து வைக்கிறார்.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனால் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன. ஆனால் ஜனநாயகத்தின் கோவிலாக திகழும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. அரசு அழைப்பு விடுத்துள்ளன.

பொதுநல மனு

இதற்கிடையே நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த வக்கீல் ஜெய் சுகின் என்பவர்தான் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசியலமைப்பு சட்டம் மீறல்

அரசியலமைப்பு சட்டம் 79-வது பிரிவில் நாடாளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது என குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே நாடாளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர். பிரதமரையும், மந்திரிகளையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன.

இதுபோன்ற சூழலில் புதிய நாடாளுமன்றத்தை திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பை குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.

ஜனாதிபதி திறக்க வேண்டும்

இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இன்று விசாரணை

இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Next Story