கர்நாடக சட்டசபையில் 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்: மாநில கவர்னரிடம் சபாநாயகர் விளக்கம்


கர்நாடக சட்டசபையில் 10 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம்: மாநில கவர்னரிடம் சபாநாயகர் விளக்கம்
x

Image Courtesy : PTI

சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்தியதாக பா.ஜனதா உறுப்பினர்கள் 10 பேரை இடைநீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை நேற்று காலை கூடியது. சட்டசபை கூடியதும் பா.ஜனதா உறுப்பினர்கள், பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கு சட்டவிரோதமாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பயன்படுத்தியதாக கூறி தர்ணா போராட்டம் நடத்தினர். இதற்காக கர்நாடக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்காக அவர்கள் ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.

சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடியபோதும், பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு குரலை உயர்த்தி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. இந்த கூச்சல்-குழப்பத்திற்கு இடையே மாநில அரசு பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றியது.

இதனிடையே பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்தனர். அவர்களை இருக்கைக்கு திரும்பும்படி சபாநாயகர் யு.டி.காதர் கேட்டுக் கொண்டார். இதை எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டுகொள்ளவில்லை. பா.ஜனதா உறுப்பினர்கள் தங்களின் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை மீது எறிந்தனர். அப்போது இருக்கையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி அமர்ந்திருந்தார். அவர் மீது வந்து விழுந்த காகிதங்களை சபை காவலர்கள் அப்புறப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு மதியம் 4 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது சபாநாயகர் யு.டி.காதர், இந்த சபையில் கண்ணியம் குறைவாக நடந்து கொண்டதுடன் சபைக்கு அவமரியாதையை ஏற்படுத்திய பா.ஜனதா உறுப்பினர்கள்(எம்.எல்.ஏ.க்கள்) 10 பேரை இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வதாக அறிவித்தார்.

இடைநீக்கம் செய்யப்பட்ட 10 எம்.எல். ஏ.க்களும் சபையை விட்டு வெளியேறும்படி சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் அந்த 10 எம்.எல்.ஏ.க்களையும் குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். இதனால் சபையில் பரபரப்பான சூழல் நிலவியது. அதன் பிறகு சபை நடவடிக்கைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் சபாநாயகர் யு.டி.காதர், துணை சபாநாயகர் ருத்ரப்பா லமானி, சட்டசபை செயலாளர் விசாலாட்சி ஆகியோர் இன்று கர்நாடக மாநில கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை சட்டசபை கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்தது தொடர்பாக விளக்கமளித்தனர்.


Next Story