பன்றிக்காய்ச்சல் பீதியில் தட்சிண கன்னடா மாவட்ட மக்கள்


பன்றிக்காய்ச்சல் பீதியில் தட்சிண கன்னடா மாவட்ட மக்கள்
x
தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 5 Nov 2022 6:46 PM GMT)

தட்சிண கன்னடா மாவட்டத்தில் 120 பன்றிகள் திடீரென செத்தன. இதனால் மாவட்ட மக்கள் பன்றிக்காய்ச்சல் நோய் பீதியில் உள்ளனர்.

பெங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டத்தில் 120 பன்றிகள் திடீரென செத்தன. இதனால் மாவட்ட மக்கள் பன்றிக்காய்ச்சல் நோய் பீதியில் உள்ளனர்.

120 பன்றிகள் செத்தன

தட்சிண கன்னடா மாவட்டம் நீர்மார்கா கிராமம் கேல்ராய் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர் கிராமத்தையொட்டிய புறநகர் பகுதியில் பன்றி பண்ணை வைத்து பன்றிகளை வளர்த்து வருகிறார். மேலும் பன்றி இறைச்சியையும் விற்று வருகிறார். இந்த நிலையில் இவரது பண்ணையில் வளர்க்கப்பட்டு வந்த 200 பன்றிகளில் 120 பன்றிகள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடுத்தடுத்து செத்தன. இந்த சம்பவம் கடந்த மாதம்(அக்டோபர்) 2-வது வாரத்தில் நடந்தது.

அதையடுத்து கால்நடை டாக்டர் மூலம் செத்துப்போன பன்றிகளின் ரத்த மாதிரி ஆய்வுக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெங்களூருவில் உள்ள கால்நடை ரத்த பரிசோதனை மையம், அந்த பன்றிகளின் ரத்த மாதிரிகளை பரிசோதித்தது. அதில் அந்த பன்றிகளுக்கு பன்றிக்காய்ச்சல் பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி கடந்த 31-ந் தேதி தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது .

பன்றிக்காய்ச்சல்

இதுபற்றி கால்நடை வளர்ப்பு துறை துணை இயக்குனர் அருண் வந்த்சே கூறுகையில், 'பிரகாசின் பண்ணையில் இருந்த 200 பன்றிகளில் 120 பன்றிகள், பன்றிக்காய்ச்சலால் செத்துள்ளன. இது அதிவேகமாக பரவுக்கூடிய நோய் ஆகும். அதைத்தான் பெங்களூரு ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதனால் மீதமுள்ள பன்றிகளையும் கொல்ல திட்டமிட்டுள்ளோம். மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து முறையான அனுமதி கிடைத்தவுடன் கொன்றுவிடுவோம்' என்று கூறினார்.

இதுபற்றி மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், பன்றிக்காய்ச்சல் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம். இது மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளுக்கு பரவக்கூடிய நோய் அல்ல. நன்றாக சமைத்து பன்றி இறைச்சியை சாப்பிட்டாலும் நோய் பாதிப்பு ஏற்படாது' என்று கூறினார்.

நோய் பாதிப்பு பகுதி

மேலும் அவர் கூறுகையில், 'தற்போதைக்கு பிரகாசின் பன்றி பண்ணையை சுற்றி ஒரு கிலோ மீட்டர் தூர சுற்றளவுக்கு நோய் பாதிப்பு பகுதியாகவும், அடுத்த 10 கிலோ மீட்டர் தூர சுற்றளவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும் அறிவித்து உள்ளோம்' என்றார்.


Next Story