காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அரசு வெளிநடப்பு


காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அரசு வெளிநடப்பு
x

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

புதுடெல்லி,

காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை களைவதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 21 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்குரிய நீரை கர்நாடகா தரமறுத்ததால் கூட்டத்தில் இருந்து தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

பின்னர் பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறும்போது, "தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்க மறுத்தது. 9-ந்தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும். ஆனால் அதை அவர்கள் ஏற்கவில்லை. தமிழகத்தின் கோரிக்கையை கர்நாடகா ஏற்க மறுத்ததால் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம்" என்று கூறினார்.


Next Story