டாஸ்மாக் விவகாரம்: சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவில் தலையிட சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
புதுடெல்லி,
தமிழகத்தில் மதுபானம் அருந்துவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. மேலும், 21 வயதுக்கு கீழ் உள்ள எதிர்கால இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு ஆளாகின்றனர். மது சமுதாயத்தையே சீரழித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை எனக் குறைக்க உத்தரவிட வேண்டும். 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்வதை தடை செய்யும் வகையில், மது வாங்குவோருக்கு உரிய அடையாள அட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால், தற்போது இளைய சமுதாயத்தினர் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர். பொது நலன் கருதி, மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களை தடுக்க, மதுபான விற்பனை நேரத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தலாம்.
அரசின் முடிவில் தலையிட முடியாது
மது குறித்து பொதுமக்கள், மது அருந்துவோரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டுவோர் மீதான வழக்குப் பதிவு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மது அருந்துவது சமூகத்துக்குக் கேடானது. இது மது அருந்துபவரை மட்டுமல்லாது, அவரது குடும்பத்தினர், அருகில் உள்ளோரையும் பாதிப்படையச் செய்கிறது. எனவே, இதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். அரசின் நிர்வாக முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பது தெரியும். ஆனால், பொது நலன் கருதி சில வழிகாட்டுதல், அறிவுரைகளை வழங்குகிறோம்.
மது பாட்டில்களில் அடையாள வில்லை (லேபிள்), விலை விவரம், புகார் தெரிவிக்கும் எண் முதலானவற்றை தமிழில் அச்சிட்டு ஒட்ட வேண்டும். மேலும், தமிழகத்தில் மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 8 மணி வரை என குறைத்து அரசு அறிவிக்கவேண்டும், என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
வழக்கை முடித்து வைத்தனர்
இந்த உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தாத மத்திய, மாநில அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன் கடந்த ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல் குழு ஆய்வு செய்த டாஸ்மாக் கடைகளில் மதுபான விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ள படங்களுடன் கூடிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வக்கீல் குழு ஆய்வு செய்வதை தெரிந்து அவசர கதியில் விலை பட்டியல் வைக்கப்பட்டுள்ளது அறிக்கையில் உள்ள படங்களில் தெளிவாக தெரிகிறது என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மதுபான விலை பட்டியலை நிரந்தர பலகையாக டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மேல்முறையீடு மனு தள்ளுபடி
சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவை எதிர்த்து கே.கே. ரமேஷ் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர். கவாய், சஞ்சய் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள், "ஏன் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்?" என கேட்டதுடன், "அரசு தேவையான கொள்கையை செயல்படுத்தி வருகிறது" என்றும் குறிப்பிட்டனர்.
மனுதாரர் சார்பில் வக்கீல் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி, இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான விற்பனைக்கான உரிமங்களை முறைப்படுத்த தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள், "தரமான மதுபானம் தேவை என்கிறீர்களா?" என கேட்டதுடன், "மதுபான விற்பனையில் மத்திய அரசிடமிருந்த அதிகார கொள்கை மாற்றப்பட்டுவிட்டதே" என்றும் குறிப்பிட்டு, இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவில் தலையிட முடியாது என கூறி மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தனர்.