ஆசிரியை தாக்கி 7-ம் வகுப்பு மாணவியின் கை முறிந்தது


ஆசிரியை தாக்கி 7-ம் வகுப்பு மாணவியின் கை முறிந்தது
x

கோலார் தங்கவயல் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கி 7-ம் வகுப்பு மாணவியின் கை முறிந்தது.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் அருகே அரசு பள்ளியில் தலைமை ஆசிரியை தாக்கி 7-ம் வகுப்பு மாணவியின் கை முறிந்தது.

7-ம் வகுப்பு மாணவி

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா குருபூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மகள் சஞ்சனா(வயது 12). இந்த சிறுமி ஆலிக்கல்லு கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் சஞ்சனா பள்ளிக்கூடத்துக்கு சென்றாள். அந்த சந்தர்ப்பத்தில் பள்ளியில் தலைமை ஆகிரியை ஹேமலதா பாடம் நடத்த 7-ம் வகுப்புக்கு சென்றுள்ளாா்.

ஹேமலதா பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது மாணவி சஞ்சனா சில சந்தேகங்களை கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலளித்த தலைமை ஆசிரியை ஹேமலதா பின்னர் சஞ்சனாவிடம் சில கேள்விகளை கேட்டுள்ளார். அதற்கு மாணவி சஞ்சனா உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கை முறிந்தது

இதனால் ஆத்திரம் அடைந்த தலைமை ஆசிரியை ஹேமலதா, சரியாக படிக்கவில்லை என்று கூறி மாணவி சஞ்சனாவை அடித்துள்ளார். அத்துடன் கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்ததில் சஞ்சனாவின் வலது கை முறிந்தது. வலியால் சஞ்சனா துடித்து கதறி அழுதாள். இதை அறிந்த சக ஆசிரியர்கள் சஞ்சனாவை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்து சஞ்சனாவின் பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று மகள் சஞ்சனாவை பார்த்தனர்.

பின்னர் அவர்கள், தங்களது உறவினர்களுடன் அரசு பள்ளிக்கூடம் எதிரே தர்ணாவில் ஈடுபட்டு தலைமை ஆசிரியை ஹேமலதாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

பரபரப்பு

மேலும் ஹேமலதாவை பணி இடமாற்றம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி அறிந்த வட்டார கல்வி அதிகாரி முனி வெங்கடராமாச்சாரி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி சஞ்சனாவின் உறவினர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பள்ளிக்கு சென்று சஞ்சனாவின் சக மாணவ-மாணவிகளிடம் நடந்த சம்பவங்கள் குறித்த விவரங்களை விசாரித்து தெரிந்து கொண்டார்.

பின்னர் ஆஸ்பத்திரிக்கு சென்று மாணவியின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். இந்த சந்தர்ப்பத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க தலைவர் வினோத்பாபு, அரசு ஊழியர் சங்க தலைவர் நரசிம்மமூர்த்தி ஆகியோர் கல்வித்துறை அதிகாரியுடன் இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story