"துல்லிய வானிலை மற்றும் வெள்ள கணிப்புக்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும்" - அமித்ஷா வலியுறுத்தல்
வானிலை மற்றும் வெள்ளத்தை துல்லியமாக கணிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லி,
எதிர்வரும் பருவமழை காலத்தை முன்னிட்டு வெள்ள தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் வெள்ளம் தொடர்பான பிரச்சினைகளை களைவதற்கான நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்க ஒருங்கிணைந்த செயல்திட்டம் வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய அமித்ஷா, வானிலை மற்றும் வெள்ளத்தை துல்லியமாக கணிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கான நடவடிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் மத்திய நீர் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். கனமழை ஏற்படக்கூடிய பகுதிகளில் மழை முன்னெச்சரிக்கை வழங்குவது குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குமாறு தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.