தெலுங்கானா: பேட்மிண்டன் விளையாடிய 38 வயது நபர் திடீர் மரணம்
தெலுங்கானாவில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருந்தபோது, 38 வயது நபர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் லல்லாகுடா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஷியாம் யாதவ் (வயது 38) என்பவர் உள்ளரங்கம் ஒன்றில் பேட்மிண்டன் விளையாட்டை விளையாடி கொண்டு இருந்து உள்ளார்.
ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின்னர் கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி பெறுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், பேட்மிண்டன் பயிற்சியின்போது திடீரென அவர் சரிந்து விழுந்து உள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த, அருகே இருந்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்று உள்ளனர். எனினும், அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதனால், மரணம் அடைந்து உள்ளார் என கூறப்படுகிறது.
இதுபற்றி லால்குடா வட்ட காவல் ஆய்வாளர் மதுலதா கூறும்போது, எங்களுக்கு தகவல் தெரிந்து சம்பவ பகுதிக்கு சென்றபோது, அந்நபரை அவருடைய நண்பர்கள் சிகிச்சைக்கு கொண்டு சென்று விட்டனர் என தெரிய வந்தது.
தொடர் விசாரணையில், பேட்மிண்டன் விளையாடியபோது திடீரென அந்த நபர் சரிந்து விழுந்து உள்ளார். அப்போது அவர் மூச்சு விட்டு கொண்டு இருந்து உள்ளார். அதன்பின்னர் என்ன நடந்தது என்பது பற்றிய விவரங்கள் எங்களுக்கு தெரியவில்லை என கூறினார்.
தெலுங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் பைனா நகரில், சில நாட்களுக்கு முன் 19 வயது இளைஞர் ஒருவர், தனது உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடியபடி இருந்தபோது, திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்து போனார்.
மராட்டிய மாநிலத்தில் வசித்து வந்த அந்த நபர், முத்தயம் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் மயங்கி சரிந்ததும், உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அதுபற்றிய வீடியோவும் வெளிவந்து வைரலானது.