சந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்கள்... சுவாரஸ்ய தகவல்கள்
சந்திர கிரகண காலத்தில் திறந்திருந்த கோவில்களை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காணலாம்.
காரைக்கால்,
இந்தியாவில் சந்திர கிரகண காலத்தின்போது திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு கோவில்கள் மூடப்பட்ட நிலையில், சில கோவில்கள் திறந்தே இருந்தன. பக்தர்களும் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கு பின்னணியில் சில சுவாரஸ்ய தகவல்கள் உள்ளன. இதுபற்றிய விவரங்களை காண்போம்.
சந்திர கிரகண நேரத்திலும், பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் பகுதியில் அமைந்த திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சந்திர கிரகணத்திலும் நடை திறக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். சந்திர கிரகணம் முடிந்த பின்பு கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.
இதன் பின்னர் மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு கிரகண கால அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
இதேபோன்று, ஆந்திர பிரதேசத்தில் உள்ள காளஹஸ்தி கோவில் திறந்து இருந்தது. கோவிலில் உள்ள சுவாமி ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கு நவக்கிரக கவசம் அணிவிக்கப்படுகிறது. இதனால், கிரகண காலத்தில் எந்தவித தாக்கமும் ஏற்படாது என பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதேபோன்று, சந்திர கிரகண காலத்தில் இந்த கோவிலில் தரிசனம் செய்யும்போது, அனைத்து வித தோஷங்களும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதனால், கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தமிழகத்தில், திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் சந்திர கிரணத்தின்போது, மகா அபிஷேகம் நடந்தது. இதன்படி, மதியம் 2.39 மணி முதல் மாலை 6.39 மணி வரை சந்திர கிரகண நிகழ்வு நடந்தது. அப்போது, தோஷங்கள் நீங்கும் வகையில், தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.