அடுத்தடுத்த கொலைகளால் பதற்றமான சூழ்நிலை; மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை


அடுத்தடுத்த கொலைகளால் பதற்றமான சூழ்நிலை; மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
x

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்த 3 கொலைகளால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் நேற்று மங்களூரு கலெக்டர் அலுவலகத்தில் இந்து-முஸ்லிம் தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

மங்களூரு;

பதற்றமான சூழல்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை நடந்த 2 நாட்களில் சூரத்கல்லில் முகமது பாசில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த 2 கொலைகள் உள்பட மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் 3 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனால் மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

மேலும் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிலையும் உருவாகி உள்ளது. இதன்காரணமாக, மாவட்டத்தில் பதற்றமான பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 144 தடை உத்தரவும், இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமைதி பேச்சுவார்த்தை

இந்த நிலையில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் அடுத்தடுத்து நடந்துள்ள கொலை சம்பவங்களால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், இந்து-முஸ்லிம் தலைவர்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட கலெக்டர் ராஜேந்திரா முடிவு செய்தார். அதன்படி நேற்று மங்களூருவில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் கலெக்டர் ராஜேந்திரா, கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தேவஜோதிராய், மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமார், போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் பகவான் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், இந்து-முஸ்லிம் தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை

இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் அடிக்கடி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் பதற்றம் நிறைந்த சுள்ளியா, புத்தூர், பெல்லாரே உள்ளிட்ட சில இடங்களில் மாதம் ஒருமுறை இருதரப்பு இடையே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கொலையானவர்களின் குடும்பத்தினருக்கு தக்க நிவாரணம் வழங்க வேண்டும். மோதலை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவிப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரவு நேர ஊரடங்கு நேரத்தை மாலை 6 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கு மாற்ற வேண்டும். வதந்திகளை பரப்பும் சமூக வலைத்தள பக்கங்களை முடக்க வேண்டும். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 144 தடை உத்தரவால் தனியார் பஸ் உரிமையாளர், ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

அவர்களின் நலனை பாதுகாக்கப்பட வேண்டும். மதுபான விடுதி, கேளிக்கை விடுதிகளின் செயல்பாடுகளை கண்காணித்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன.


Next Story