பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் விவகாரம்: சொத்துகளை முடக்கி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்க காஷ்மீர் டி.ஜி.பி. வலியுறுத்தல்


பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் விவகாரம்:  சொத்துகளை முடக்கி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்க காஷ்மீர் டி.ஜி.பி. வலியுறுத்தல்
x

பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் விவகாரத்தில் சொத்துகளை முடக்கி, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என காஷ்மீர் டி.ஜி.பி. வலியுறுத்தி உள்ளார்.



ஜம்மு,


ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வேட்டையில் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். எனினும், பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், தங்கும் இல்லம் போன்ற வசதிகளை உள்ளூர் மக்கள் செய்து தருவது தெரிய வந்து அதுபற்றி எச்சரிக்கை விடப்பட்டது.

இதுபற்றி ஸ்ரீநகர் போலீசார் விடுத்துள்ள செய்தியில், காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதோ, தளவாடங்களை வழங்குவதோ கூடாது என அனைத்து குடிமக்களிடமும் மீண்டும் வேண்டுகோளாக கேட்டு கொள்ளப்படுகிறது.

அப்படி இல்லாமல், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது அல்லது தளவாட உதவிகளை வழங்குவது நிரூபிக்கப்பட்டால், அவர்களின் சொத்துகளை முடக்கம் செய்வது அல்லது பறிமுதல் செய்வது முதல் கைது வரை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் டி.ஜி.பி. தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் பேசும்போது, பயங்கரவாதியை சுட்டு வீழ்த்துவது என்பது போதிய விசயம் இல்லை. அந்த நபருக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்களை நீதியின் முன் கொண்டு வரவேண்டும்.

பயங்கரவாத நெட்வொர்க்குகளுக்கு ஆதரவு தரும் யார் ஒருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதிகளுக்கு எந்த வகையிலாவது உதவ கூடியவர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றவாளியின் சொத்துகள் முடக்கப்பட வேண்டும். தப்பி சென்ற குற்றவாளியை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழான வழக்குகளை கண்காணிப்பு அதிகாரிகளான நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஆய்வு செய்து, அதன் முக்கியத்துவம் கருதி விசாரணையை தொடங்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.


Next Story